ரூ.50,000 முன்பணம் கட்டினால் புதிய இன்டிகா: டாடா அதிரடி ஆஃபர்

வர்த்தக மார்க்கெட்டை தவிர்த்து தனி நபர் பயன்பாட்டு பிரிவு வாடிக்கையாளர்களுக்காக இவி2 காரை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. அதிக மைலேஜ், தாராள இடவசதி ஆகியவை இன்டிகா இவி2வுக்கு வலு சேர்த்து வருகிறது.
இந்த நிலையில், வடிவமைப்பில் மாறுதல்களுடன், கூடுதல் அம்சங்களுடன் புதிய இன்டிகா இவி2 ஹேட்ச்பேக் காரை டாடா அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்லைட், புதிய கிரில், அலாய் வீல் ஆகிய கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ளது.
ஆட்டோ டிரைவ் அசிஸ்ட், கிளட்ச் டூ ஸ்டார்ட் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப அம்சங்களையும் புதிய இன்டிகா இவி2 பெற்றிருக்கிறது. உட்புறம் பீயேஜ் வண்ண கலவையில் மிளிர்கிறது.
டாப் வேரியண்ட்டில் பிரிமியம் வுட் பினிஷ், பவர் விண்டோஸ், கீ லெஸ் என்ட்ரி, புளூடூத் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், 4 ஸ்போக் டில்ட் ஸ்டீயரிங், டாக்கோமீட்டர், முன்புறம், பின்புறம் பனி விளக்குகள் என அசத்தலான அம்சங்களுக்கு பஞ்சமில்லை.
புதிய இன்டிகா இவி2 காரில் 70 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பாரத் ஸ்டேஜ் 4 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட இந்த எஞ்சின் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று பெற்றது.
இதுதவிர, பெட்ரோல் மாடலிலும் கிடைக்கிறது. புதிய இவி2 கார் 3 வேரியண்ட்களில் கிடைப்பதோடு, விருப்பம்போல் தேர்வு செய்ய வசதியாக 5 வண்ணங்களில் கிடைக்கிறது. பழைய இன்டிகா இவி2 காரை விட கூடுதல் அம்சங்களுடன் வந்திருக்கும் புதிய இன்டிகா இவி2 விலையிலும் ரூ.23,000 குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் மாடலின் பேஸ்வேரியண்ட் ரூ.4,01,162 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.4,87,619 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
மேலும், சாலை வரி, இன்ஸ்யூரன்ஸ் மற்றும் பதிவுக் கட்டணம் உள்ளிட்டவை சேர்ந்த ஆன்ரோடு விலையில் ரூ.50,000 முன்பணம் செலுத்தினால் புதிய இன்டிகா இவி2 காரை கடன் திட்டத்தில் வாங்கிக்கொள்ளும் சலுகையும் டாடா மோட்டார்ஸ் சொந்த பைனான்ஸ் மூலம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








