டீசல் கார்களைவிட பெட்ரோல் கார்கள்தான் சிக்கனமானது: ஆய்வில் தகவல்

பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதிக மைலேஜ் கொடுப்பது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே, பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்கள் சிக்கனமானதாக கருதி வாடிக்கையாளர்கள் கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.
இந்த நிலையில், டீசல் கார்களைவிட பெட்ரோல் கார்கள்தான் சிக்கனமானதாக இருப்பதாக லண்டனை சேர்ந்த நுகர்வோர் அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
ஃபோர்டு ஃபியஸ்ட்டா, வாக்ஸ்ஹால் அஸ்ட்ரா, போக்ஸ்வேகன் டிகுவான், போக்ஸ்வேகன் ஷரன், பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் மற்றும் பீஜோ 308எஸ்டபிள்யூ ஆகிய 6 கார்களின் டீசல் மற்றும் பெட்ரோல் மாடல்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஓர் ஆண்டுக்கு எரிபொருளுக்காக செலவிடப்பட்ட ரசீதுகளை எடுத்துக் கொண்டும், ஓர் ஆண்டுக்கு கார்கள் சென்ற சராசரி தூரத்தை அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், ஓர் ஆண்டுக்கு 10,000 மைல்கள்(16,000கிமீ) கார்கள் ஓடியதை அடிப்படையாக வைத்து 6 கார்களின் டீசல் மற்றும் பெட்ரோல் மாடல்களின் எரிபொருள் செலவு கணக்கிடப்பட்டது.
இதில், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் 6 கார் மாடல்களில் 4 கார்களின் டீசல் மாடலை விட பெட்ரோல் மாடல்கள் எரிபொருள் செலவில் சிக்கனமானதாக கண்டறியப்பட்டது. விலை மற்றும் எரிபொருள் செலவையும் கணக்கிட்டு, ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் பெட்ரோல் காரைவிட டீசல் கார் 6 பைசா கூடுதல் எரிபொருள் செலவீனத்தை தருவதாகவும் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் கார்களை விட டீசல் கார்கள் விலை அதிகமாக இருக்கிறது. எனவே, கார் வாங்கும்போது டீசல் கார்களுக்கு கொடுக்கப்படும் அதிக தொகையையும், எரிபொருள் செலவையும் வைத்து கணக்கிடும்போது, டீசல் கார்கள் 14 ஆண்டுக்கு பின்னரே பெட்ரோல் கார்களின் சிக்கனத்தை சமன் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பெட்ரோலைவிட டீசல் விலை சற்று அதிகம். மேலும், இந்த ஆய்வு அன்லீடட் பெட்ரோலையும், டீசலையும் ஒப்பிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








