வரும் 23ந் தேதி பெட்ரோல் பங்குகள் வேலைநிறுத்தம்

கமிஷனை அதிகரித்து தருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2010ம் ஆண்டு நாடுமுழுவதும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இந்த குழு அளிக்கும் பரிந்துரையின்படி மத்திய அரசு நடவடி்க்கை எடுக்கும் என்று அப்போதைய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா உறுதியளித்தார். ஆனால், இந்த குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவி்ல்லை.
இந்த குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அகில இந்திய பெட்ரோல் விற்பனையாளர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வரும் 23ந் தேதி ஒருநாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்பின்னரும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 30ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய பெட்ரோலிய விற்பனையாளர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அஜய் பன்சால் கூறியதாவது:
"கடந்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 9 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், பெட்ரோல் விற்பனையாளர்களுக்கான கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை.
இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் பலனில்லை. எனவேதான், வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.49 கமிசனாகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 91 காசுகள் கமிசனாகவும் தரப்படுகிறது. இதை 5 சதவீதமாக உயர்த்தி தரவேண்டும். மேலும், பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களில் காற்றுப்பிடிப்பதற்கும், கழிவறையை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்க வேண்டும்.
தவிர, எண்ணெய் நிறுவனங்கள் புதிய பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளோம்," என்றார்
நாடு முழுவதும் 40,000 பெட்ரோல் பங்குகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. தமிழகத்தில் மட்டும் 3,000க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் வரும் 23ந் தேதி இயங்காது என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications