செவர்லே ஆலையில் கார்களை தயாரிக்க பீஜோ புது முடிவு

ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான பீஜோ நிறுவனம் கடந்த 1997ம் ஆண்டு வரை பிரிமியர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபட்டு வந்தது. எதிர்பார்த்த அளவு கார் விற்பனையை நிறுத்தியது பீஜோ.
இந்த நிலையில், இந்தியாவில் கார் விற்பனை அதீத வளர்ச்சி கண்டு வருவதால், மீண்டும் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைக்க அந்த நிறுவனம் முடிவு செய்தது. அடுத்த ஆண்டுக்குள் ஒரு ஹேட்ச்பேக் மற்றும் ஒரு செடான் காரை அறிமுகப்படுத்த பீஜோ திட்டமிட்டுள்ளது.
மேலும், கார் உற்பத்திக்காக ரூ.4000 கோடியில் குஜராத்தில் புதிய ஆலை கட்ட முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்காக, பூமி பூஜை கூட நடத்தப்பட்டது.
ஆனால், திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது பீஜோ. இந்தியாவில் பெரும் முதலீடு செய்வதை தவிர்க்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், தனது சர்வதேச கூட்டணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலைகளில் கார் உற்பத்தி செய்ய அந்த நிறுவனனம் தற்போது முடிவு செய்துள்ளது.
செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்து வரும் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்சுக்கு மஹாராஷ்டிரா மற்றும் குஜாராத்தில் கார் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் கார் உற்பத்தி செய்ய பீஜோ முடிவு செய்துள்ளது.
வாகன தயாரிப்பில் இணைந்து ஈடுபடுவதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் பீஜோ நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், பீஜோ கார் நிறுவனத்தின் 7 சதவீத பங்குகளை ஜெனரல் மோட்டார்ஸ் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








