நிசான் மாடல்களை காப்பியடிப்பது ஏன்?- ரெனோ தலைவர் விளக்கம்

நிசான் நிறுவனத்தின் மைக்ரா மற்றும் சன்னி கார்களை வடிவமைப்பில் சிற்சில மாறுதல்களை செய்து பல்ஸ் மற்றும் ஸ்கேலா என்ற பெயரில் ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அடுத்தடுத்து நிசான் மாடல்களை சிற்சில மாற்றங்களை செய்து புதிய பெயரில் ரினால்ட் அறிமுகம் செய்தது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ரினால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மார்க் நசீப் கூறுகையில்," இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் புத்திசாலிகள் என்பதை அறிவோம். எங்களது நிறுவனம் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
பிராண்டு மதிப்பை உயர்த்தும் நோக்கில்தான் பிரிமியம் அம்சங்களுடன் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். குறுகிய காலத்தில் நிறைவான, தரமான, சரியான விலையில் வழங்க வேண்டியிருக்கிறது. இதற்காகத்தான், நிசான் கார்களை ரீபேட்ஜ் செய்து அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இரு கார்களிலும் இருக்கும் வித்தியாசங்களை வாடிக்கையாளர்கள் நன்கு அறிவர். இந்திய வாடிக்கையாளர்கள் போதுமான விழிப்புணர்வுடன், நல்ல அறிவாற்றலுடன் இருக்கின்றனர் என்பதை அறிந்துள்ளோம். மேலும், புதிய கார்களை அறிமுகம் செய்தால் அதற்காக ஆலையில் தனி உற்பத்தி பிரிவு வேண்டும்.
தற்போது மைக்ரா, பல்ஸ் மற்றும் சன்னி, ஸ்கேலா ஆகியவை ஒரே உற்பத்தி பிரிவில் உற்பத்தி செய்ய முடியும். அதேவேளை, வடிவமைப்பு, வசதிகளில் வேறுபாடுகள் இருப்பதையும் பார்க்க வேண்டும்," என்றார்.
இதேபோன்று, போக்ஸ்வேகனின் வென்ட்டோ மற்றும் ஸ்கோடாவின் ரேபிட் ஆகிய கார்கள் ஒரே வடிவமைப்பு மற்றும் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்ஸ்வேகன் அதிகாரி ஒருவர் கூறுகையில்," தோற்றம், ஸ்டைல் ஆகியவற்றை வைத்து மட்டும் வாடிக்கையாளர்கள் கார்களை தேர்வு செய்வதில்லை.
ஒளிவு மறைவில்லாத சேவை, சர்வீஸ் நெட்வொர்க் உள்ளிட்ட ஏராளமான முக்கிய விஷயங்களை கருத்தில்கொண்டே அவர்கள் கார்களை தேர்வு செய்கின்றனர். எனவே, இதில் முகம் சுளிப்பதற்கு ஏதுமில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications








