சென்னை ஆலையில் புதிதாக 500 பேருக்கு வேலை: ரினால்ட்-நிசான் அறிவிப்பு

பிரான்சை சேர்ந்த ரினால்ட் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிசான் ஆகியவை சர்வதேச அளவில் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன.
இந்த கூட்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை சென்னை அருகே ஒரகடத்தில் அமைந்துள்ளது. ரூ.4,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில் இரண்டு நிறுவனங்களின் கார்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டு தங்களது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த இந்த கூட்டு குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய உற்பத்தி பிரிவும் அமைக்கப்படுகிறது.
இந்த புதிய உற்பத்தி பிரிவில் பணியாற்றுவதற்காக 500 புதிய தொழிலாளர்களை ரினால்ட்-நிசான் கூட்டுகுழுமம் பணியில் சேர்க்க உள்ளது.
இதுகுறித்து, ரினால்ட்-நிசான் கூட்டு குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் கோஜி தாகி கூறியதாவது:
"4 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் திறனை அதிகரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்காக, தற்போது புதிய உற்பத்தி பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இரண்டு உற்பத்தி பிரிவு உள்ளன. ஒன்றில் மைக்ரா, சன்னி மற்றும் பல்ஸ் ஆகிய கார்களும் மற்றொன்றில் சிகேடி கார்களின் அசெம்பிளிங்கும் நடந்து வருகிறது.
புதிதாக அமைக்கப்படும் உற்பத்தி பிரிவில் நிசான் இவாலியா எம்பிவி கார் உற்பத்தியை துவங்க உள்ளோம். புதிய உற்பத்தி பிரிவிற்காக 700 தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதில், 200 பேர் ஏற்கனவே எங்களது பிற உற்பத்தி பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்வோம்.
மேலும், 500 பேரை புதிதாக பணியில் சேர்க்க உள்ளோம்,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








