டஸ்ட்டரை நம்பி ரினால்ட் வைத்த பெரும் இலக்கு

இந்திய மார்க்கெட்டில் பெரும் கனவுகளோடு காய்களை நகர்த்தி வருகிறது ரினால்ட் நிறுவனம். கடந்த ஆண்டு முதல் தனி ஆவர்த்தனம் செய்து வரும் நிலையில், அந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய 3 மாடல்களாலும் ரினால்ட்டுக்கு பெரிய பிரயோஜனம் இல்லை.
கடந்த 2011-12ம் நிதி ஆண்டில் மொத்தமே 4,000 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் மொத்தமாக 30,000 கார்களை விற்க அந்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. தொடர்ந்து அடுத்த நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக அதிகரிக்க ரினால்ட் முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய டஸ்ட்டர் எஸ்யூவி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அந்த நிறுவனம் நம்பிக்கையுடன் பெரும் விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும், காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் முதல் மாடலாக வந்துள்ளதால் டஸ்ட்டரை பற்றி தெரிந்துகொள்ள ரினால்ட் ஷோரூமுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர்.
இது ரினால்ட் நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. டஸ்ட்டர் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என்று நம்பிக்கை பிறந்துள்ளதால், இந்த இலக்கை நிர்ணயித்து இருப்பதாக அதன் தலைவர் மார்க் நசீப் தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை எட்டுவதற்கு புதிய டீலர்கள் மற்றும் சர்வீஸ் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளையும் தீவிரமாக்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த முயற்சிகள் மூலம் ரினால்ட் நிறுவனத்தின் டாப் 10 மார்க்கெட்டில் இந்தியாவும் இடம்பெற வைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








