தொழில்நுட்பக் கோளாறு வாகனங்களை திரும்ப பெறும் திட்டம்: சியாம் அறிவிப்பு

வாகனங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மன உளைச்சல் மற்றும் பொருட் செலவு ஏற்படுகிறது.
இந்த நிலையில், வாகனங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்பேற்று இலவசமாக சரி செய்து தரும் புதிய நடைமுறையை(ரீகால்) வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) வகுத்துள்ளது.
இதன்படி, வாகனங்கள் தயாரித்து 7 ஆண்டுகளுக்குள் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிய வந்தால், வாகன நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து ரீகால் அறிவிப்பை வெளியிட வேண்டும்.மேலும், கோளாறு இருப்பதாக கருதப்படும் வாகனங்களை திரும்ப பெற்று இலவசமாக சரி செய்து தர வேண்டும்.
கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை தயாரிக்கும் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இந்த திரும்ப பெறும் நடைமுறையை பின்பற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சியாம் தலைவர் சாண்டில்யா கூறுகையில்,"ஒட்டுமொத்த வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இந்த புதிய நடைமுறையை பின்பற்றும். இதன்மூலம், தரமான தயாரிப்பை வழங்கவும் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்," என்றார்.
இந்த புதிய திட்டத்தின் கொள்கைகளைபடி, சரியான ஆதாரம் இருந்தும் ரீகால் அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், இதில் மத்திய அரசோ அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றும் சியாம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








