வரும் 1ந் தேதி முதல் ரீகால் விதிமுறைகள்: சியாம் அறிவிப்பு

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ரீகால் நடைமுறைகள் கடுமையான விதிமுறைகளுடன் பின்பற்றப்படுகின்றன. கார் உள்ளிட்ட வாகனங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்புகள் உடனடியாக சம்பந்தப்பட்ட காருக்கு ரீகால் அறிவிப்பை தன்னிச்சையாக வெளியிடும்.
அந்தளவுக்கு அதிகாரம் பெற்ற அமைப்பாக அவை திகழ்கின்றன. இந்த அமைப்புகளுக்கு பயந்து கார் நிறுவனங்களே ரீகால் அறிவிப்பை வெளியிடுவதும் உண்டு. தவிர, வாடிக்கையாளர்களின் புகார்களுக்கும் உடனடியாக தீர்வு கிடைத்துவிடும்.
இதேபோன்ற அமைப்பு நம் நாட்டிலும் நிறுவ வேண்டும் கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்த நிலையில், வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பான(சியாம்) வரும் ஜூலை 1ந் தேதி முதல் ரீகால் அறிவிக்கும் நடைமுறையை பின்பற்ற உள்ளதாக தெரிவித்துள்ளன.
மாருதி, மஹிந்திரா, ஹூண்டாய், டொயோட்டோ, டாடா, ஹீரோ ஹோண்டா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இந்த ரீகால் விதிமுறைகளை பின்பற்ற ஒருமித்த கருத்துடன் தாமாக முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வாகன தயாரிப்பின்போது ஆலைகளில் தர மேலாண்மை மேம்படுத்துதல் அவசியமாகும். தவிர, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தால் அதுகுறித்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாகனங்களில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தானாக ரீகால் அறிவிப்பை வெளியிட வேண்டியிருக்கும். இதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ளது போன்று மத்திய அரசாங்கமே இதற்காக புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








