ஆப்பிள் ஐ-கார் வடிவமைக்க விரும்பிய ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஐபாட், ஐபேட், ஐபோன் ஆகியவற்றின் மூலம் ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரும் வெற்றியை தேடி தந்தவர் மறைந்த அதன் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ். புற்றுநோய் பாதிப்பால் கடந்த ஆண்டு மரணத்தை தழுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் இழப்பு மின்னணு சாதன உலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டதாக கருதி வருகிறோம்.
ஆனால், அவரது மறைவு ஆட்டோமொபைல் துறைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டதாகவே தற்போது கருத முடிகிறது. ஐபோன், ஐபேட், ஐபாட் ஆகிய சாதனங்களுக்கு பிறகு அவர் புதிய மின்னணு சாதனம் எதையும் தயாரிக்க திட்டமிடவில்லை.
அதற்கு மாறாக ஆட்டோமொபைல் துறை பக்கம் அவரது கவனம் திரும்பியிருந்தது. ஆம், ஐ-காரை தயாரிக்க ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பியதாக ஜே. க்ரூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மில்லார்டு மிக்கி ட்ரெக்ஸ்லர் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் விற்பனையாகும் 90 சதவீத கார்கள் ஐபாட் சாதனம் பொருத்தப்பட்டு விற்பனையாகிறது. இதனால், என்னவோ ஸ்டீவ் ஜாப்ஸ் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய யுகத்துக்கான தொழில்நுட்பத்துடன் ஐ-காரை வடிவமைக்க விரும்பியதாக ட்ரெக்ஸ்லர் தெரிவித்திருக்கிறார்.
மறைந்தும் மறையாமல் ஆப்பிள் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருந்திருந்தால் கார் வடிவமைப்பு துறையில் கண்டிப்பாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பார். இருப்பினும், அவரது ஆசையை கருத்தில்கொண்டு புதிய ஐ-காரை வடிவமைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டால் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து விடுபட்ட செய்தி இது. ஸ்டீவ் ஜாப்ஸ் கடைசி வரை தனது காரில் நம்பர் பிளேட் பொருத்தியதில்லை. ஏனெனில்,அவர் வசித்த கலிபோர்னியா மாகாணத்தில் போக்குவரத்து விதிகளின்படி, ஒருவர் புதிய கார் வாங்கினால் 6 மாதத்துக்கு நம்பர் பிளேட்டை கட்டாயம் பொருத்த தேவையில்லை.
எனவே, நம்பர் பிளேட் பொருத்துவதை தவிர்க்க 6 மாதத்திற்கு ஒரு முறை தனது பென்ஸ் காரை மாற்றிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பது கொசுறு தகவல்.


Click it and Unblock the Notifications








