திருடு போன காரை 42 ஆண்டுகளுக்கு பின் மீட்ட அமெரிக்கர்!

டெக்சாஸ் நகரில் வசித்து வருபவர் ராபர்ட் ரசெல். கடந்த 1970ம் ஆண்டு இவர் பிலடெல்பியா நகரில் வசித்து வந்தார். அப்போது இவர் வைத்திருந்த ஆஸ்டின் ஹீலி ஸ்போர்ட்ஸ் கார் வீட்டிலிருந்து திருட்டு போனது.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதற்காக ராபர்ட் மனம் தளரவில்லை. அந்த கார் என்றாவது ஒருநாள் தனக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தனது தேடுதலை தொடர்ந்தார். ஓர் ஆண்டு, ஈராண்டு அல்ல.. மனம் சளைக்காமல் தனது தேடுதல் முயற்சியை தொடர்ந்தார்.
அதற்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது. ஆம், கடந்த 1970ம் ஆண்டு திருட்டு போன அந்த காரை சமீபத்தில் கண்டுபிடித்து மீட்டுள்ளார் ராபர்ட். பிரபல இ-பே ஆன்லைன் ஏல நிறுவனத்தில் அந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. தன்னிடம் இருந்த அந்த காரின் ஒரிஜினல் ஆவணங்களை பொருத்தி பார்த்து அது தன்னுடைய கார் என்று உறுதி செய்து கொண்டார்.
பின்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த துப்பறியும் நிறுவனத்தின் உதவியுடன் அந்த காரை ஏல நிறுவனத்திடமிருந்து மீட்டுள்ளார். மேலும், அந்த காரை தற்போது டெக்ஸாசில் உள்ள தனது வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார்.
42 ஆண்டுகளுக்கு பின்னர் திருடு போன கார் கிடைத்துள்ளது குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"இந்த காரின் விலை எனக்கு பொருட்டாக இல்லை. இந்த கார் சென்ட்டிமென்ட்டாக எனக்கும், எனது மனைவிக்கும் ராசியான கார்.
எனவேதான், தொடர்ந்து காரை தேடினேன். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. கார் நல்ல நிலையில் உள்ளது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சிறு வேலைகளை செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்," என்று கூறினார்.
1967ம் ஆண்டு மாடலான இந்த ஆஸ்டின் ஹீலி ஸ்போர்ட்ஸ் காரை அப்போது 3,000 டாலருக்கு ராபர்ட் வாங்கியுள்ளார். ஆனால், அந்த கார் இப்போது 23,000 டாலருக்கு விலை போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








