எஸ்யூவி மார்க்கெட் விற்பனை ஜோர்: வரிசை கட்டும் புதிய மாடல்கள்
இதுவரை இல்லாத அளவுக்கு எஸ்யூவி மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி கண்டு வருவதால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் புத்தம் புதிய தயாரிப்புகளுடன் இந்த மார்க்கெட்டில் போட்டி போட தயராகிவிட்டன.
கடந்த ஆண்டு முதலே எஸ்யூவி மார்க்கெட் அசுர வேக வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த 2011-12 நிதியாண்டில் மட்டும் நம் நாட்டில் 3.67 லட்சம் எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 16 சதவீத வளர்ச்சி.

மேலும், மொத்த கார் மார்க்கெட்டில் 11 சதவீதமாக இருந்த எஸ்யூவி கார்களின் பங்களிப்பு தற்போது 3 சதவீதம் உயர்ந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. கார் மார்க்கெட் அவ்வப்போது படுத்து எழுந்து வரும் நிலையில், எஸ்யூவி மார்க்கெட் சீரான வளர்ச்சி கண்டு வருகிறது.
இவை அனைத்தும் கார் நிறுவனஙகளை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளன. எனவே, ஆளுக்கொரு புத்தம் புது எஸ்யூவி கார்களுடன் அடுத்தடுத்து மார்க்கெட்டில் களமிறங்கி வருகின்றன.
முதலாவதாக, பிரெஞ்ச் கார் தயாரிப்பு நிறுவனமான ரினால்ட் டஸ்ட்டர் என்ற காம்பெக்ட் எஸ்யூவியை சமீபத்தில் களமிறக்கியது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் என்ற அட்டகாசமான காம்பெக்ட் எஸ்யூவியை விரைவில் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறது.
தற்போது ஆட்டோமாபைல் துறையினர் மற்றும் வாடிக்கையாளர்கள் மொத்த கவனமும் இந்த புதிய எஸ்யூவி மீதுதான் அதிகம் விழுந்துள்ளன. இதையெல்லாம் பார்த்த ஜப்பானிய நிறுவனமான டொயட்டா புதிய காம்பெக்ட் எஸ்யூவியை களமிறக்க முடிவு செய்துள்ளது. இத்துடன் மிட்சைஸ் செடான் காரும் வருகிறது.
இதேபோன்று, 'சிறிய கார்கள் உண்டு; தான் உண்டு,' என்று இருந்த மாருதிக்கும் எஸ்யூவி மார்க்கெட்டில் நுழைய ஆசை பிறந்துள்ளது. எக்ஸ்ஏ ஆல்பா என்ற குறியீட்டு பெயரில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது.
எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் பெயரெடுத்துள்ள மஹிந்திரா சும்மா இருக்குமா என்ன. ஸைலோவை மறுவடிவமைப்பு செய்து விரைவி்ல் மினி ஸைலோ என்ற பெயரில் காம்பெக்ட் எஸ்யூவி காராக களமிறக்குகிறது. இதுபோன்று, அனைத்து நிறுவனங்களும் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலையில் புதிய எஸ்யூவி மாடல்களை வரிசை கட்ட உள்ளன.
விலை, வடிவமைப்பு, தரம், மைலேஜ் ஆகியவற்றை வைத்து யார் இதில் வெற்றிப் பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








