இந்தியா வருகிறார் சுஸுகி தலைவர்: மானேசர் ஆலை திறக்கப்படுமா?

வன்முறை சம்பவங்களால் மூடப்பட்டு கிடக்கும் மானேசரிலுள்ள மாருதி ஆலை எப்போது திறக்கப்படும் என்பதே தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 1,700 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் மாருதிக்கு இதுவரை 2,500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களை புக்கிங் செய்து காத்துக் கிடக்கும் வாடிக்கையாளர்கள் ஆலை எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கிடக்கின்றனர். இந்த விஷயத்தில் மாருதி நிறுவனம் விரைந்து முடிவு எடுத்து ஆலையை திறக்க வேணடும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, ஆலையை திறப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், பணியாளர்கள் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த விஷயத்தில் மாருதி மிக கவனமாக கையாண்டு வருகிறது.
மேலும், போலீஸ் பாதுகாப்புடன் ஆலையை திறப்பதற்கான முயற்சிகளையும் அந்த நிறுவனம் எடுத்து வருகிறது. மானேசர் ஆலையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மானேசர் ஆலையை திறப்பது குறித்து ஆய்வு செய்து இறுதி முடிவு எடுப்பதற்காக மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியின் தலைவர் ஒஸாமு சுஸுகி விரைவில் இந்தியா வர இருப்பதாக மாருதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, மானேசர் ஆலை திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications