ஜார்கண்ட் போலீசுக்கு கவச வாகனங்கள் தயாரித்து கொடுத்த டாடா

கனிம வளம் மிகுந்த ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் மற்றும் மாபியா கும்பல்களின் ஆதிக்கம் அதிகமிருக்கிறது. அவர்களின் அட்டூழியங்களை ஒடுக்குவதற்காக மாநில போலீசார் மற்றும் மத்திய படை போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் மீது அவர்கள் அவ்வப்போது நடத்தும் கண்ணி வெடி மற்றும் கொரில்லா தாக்குதல்களால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் கவச வாகனங்களை தயாரித்து தருவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது.
இதன்படி, நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட 5 கவச வாகனங்களை டாடா மோட்டார்ஸ் தயாரித்தது. மேலும், இந்த கவச வாகனங்களை முறைப்படி ஜார்கண்ட் போலீசாரிடம் டாடா மோட்டார்ஸ் ஒப்படைத்தது.
கட்டுறுதி வாய்ந்த சேஸிஸ் மற்றும் வி வடிவ சேஸிஸ் கொண்ட இந்த கவச வாகனங்கள் கண்ணி வெடித் தாக்குதல்களில் கூட சேதமடையாது. மேலும், சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டிலிருந்தும் உள்ளே பயணிப்பவர்களை பாதுகாக்கும்.
மேலும், கவச வாகனங்களின் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் எளிதில் கிடைக்கும் வகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் சர்வீஸ் சென்டர் மற்றும் ஸ்பேர்பார்ட்ஸ் பிரிவை டாடா திறக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம், சிறப்பான சேவையை வழங்க முடியும் என டாடா அதிகாரி தெரிவித்தார்.
ஜார்கண்ட் போலீசாருக்கு 5 கவச வாகனங்களை டாடா டெலிவிரி கொடுத்துள்ள நிலையில், மஹாராஷ்டிர போலீசார் இதேபோன்று 32 கவச வாகனங்களை தயாரித்து வழங்குமாறு ஆர்டர் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications