ஸ்வீடன் சாப் கார் நிறுவனத்தை வாங்க களத்தில் குதித்த டாடா மோட்டார்ஸ்

ஸ்வீடனை சேர்ந்த சாப் ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த ஆண்டு கடும் நிதி நெருக்கடியில் சி்க்கியது. நிதி நெருக்கடியிலிருந்து விடுபட அந்த நிறுவனம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இதையடுத்து, தனது அனைத்து சொத்துக்களையும் விற்பனை செய்யப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சாப் நிறுவனத்தை வாங்குவதற்கு உலகின் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
மஹிந்திராவும் கூட சாப் நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தது. சீனாவை சேர்ந்த யங்மேன் நிறுவனம் ரூ.1,500 கோடிக்கு சாப் நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டின் மற்றொரு மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தற்போது சாப் நிறுவனத்தை வாங்குவதற்கு களமிறங்கியுள்ளது. ரூ.1,750 கோடிக்கு சாப் ஆட்டோமொபைல் நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரபல வர்த்தக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இதேபோன்று, கடந்த 2008ம் ஆண்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த பிரிட்டனை சேர்ந்த பிரபல சொகுசு கார் நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களை டாடா மோட்டார்ஸ் வாங்கியது. அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து இரு நிறுவனங்களையும் ரூ.11,500 கோடி கொடுத்து டாடா மோட்டார்ஸ் வாங்கியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








