டாடா மோட்டார்ஸ் சர்வதேச வாகன விற்பனை 13% உயர்வு
பிரி்ட்டனை சேர்ந்த ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் பிராண்டுகளை தேவையில்லாமல் அதிக விலை கொடுத்து டாடா மோட்டார்ஸ் வாங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன. அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா புன்னகையை மட்டுமே பதிலாக தந்துவி்ட்டு சென்றார்.
அந்த புன்னகைக்கு விடை இப்போது தெரிந்துவிட்டது. கார் விற்பனையில் மிகவும் பின்தங்கி இருந்த அந்த இரண்டு ஆடம்பர கார் நிறுவனங்களின் தயாரிப்புகளும் இப்போது டாடா கைமாறிய பின் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன. அந்தளவுக்கு தாரளமாக முதலீடுகளையும் டாடா செய்து வருகிறது.
இதற்கு கைமேல் பலனமாக, டாடாவின் சர்வதேச வாகன விற்பனை வளர்ச்சியில் ஜாகுவார், லேண்ட்ரோவரின் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. ஜாகுவார், லேண்ட்ரோவர் புண்ணியத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை தொடர்ந்து நல்ல வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
ஆகஸ்ட்டில் ஜாகுவார், லேண்ட்ரோவர் உள்ளிட்ட டாடா மோட்டார்ஸ் குழுமம் ஒட்டுமொத்தமாக 97,225 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 13 சதவீதம் அதிகமாகும்.
கடந்த மாதம் மட்டுமல்ல, நடப்பு ஆண்டின் முதல் 5 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் சர்வதேச அளவில் 4,75,381 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் முதல் 5 மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது இது 11 சதவீதம் கூடுதலாகும்.
சர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ் ஆகஸ்ட்டில் 23,081 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 35 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 24,060 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே டாடாவின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications