மஹிந்திராவை பின்னுக்குத் தள்ளி மீண்டும் 3ம் இடத்தில் டாடா

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனையில் டாடாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்தது மஹிந்திரா. இந்த காலகட்டத்தில் மஹிந்திரா 61,504 கார்களையும், டாடா மோட்டார்ஸ் 60,405 கார்களையும் விற்பனை செய்தன. இதனால், நீண்ட காலமாக மூன்றாம் இடத்தில் இருந்து வந்த டாடா நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் மூன்றாம் இடத்தை பிடிப்பதற்காக டாடா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக, நானோ விற்பனையை அதிகரித்து அதன்மூலம் மூன்றாம் இடத்தை பிடிக்க டாடா திட்டமிட்டது. இதற்கு நல்ல பலன் கிட்டியிருக்கிறது. கடந்த மாத விற்பனை நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் மீண்டும் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த மாதம் மொத்தம் 26,240 கார்களை டாடா விற்பனை செய்துள்ளது. இதில், நானோ கார்தான் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் 22,011 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 86,679 கார்களை டாடா விற்பனை செய்துள்ளது.
ஆனால், மஹிந்திரா 83,515 கார்களை விற்பனை செய்துள்ளது.இதனால், நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் மொத்த கார் விற்பனையிலும் டாடா மூன்றாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாகி பிரவீன் ஷா கூறுகையில்," இடத்தை பிடிக்கும் ஓட்டப்பந்தயத்தில் ஓட நாங்கள் விரும்ப வில்லை. இரட்டை இலக்க வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
மேலும், எங்களது தயாரிப்புகளுக்கு மார்க்கெட்டில் அதிக தேவை நிலவுகிறது. அதை நிறைவு செய்வதை அடிப்படையாக கொண்டே பயணித்து வருகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








