புதிய ஸ்விப்ட்டுக்கு நேருக்கு நேர் சவால் விடும் டாடா விஸ்டா

கடந்த ஆண்டு ஸ்விப்ட் அறிமுகம் செய்யப்பட்ட போது வேறு கார் மாடல்களுக்கு இடமளிக்காத வகையில் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, ஸ்விப்ட்டை விட விஸ்டாவில் உள்ள சிறப்பம்சங்களை மேற்கொள்காட்டி புதிய விளம்பர பிரச்சாரத்தை டாடா மேற்கொண்டது. இதற்கு ஏட்டிக்கு போட்டியாக மாருதியும் டாடா கார்களை டாக்சியாக வர்ணித்து விளம்பரம் செய்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், ஸ்விப்ட்டை கலாய்க்கும் அதே விளம்பரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது டாடா. இதற்கு காரணம் ஸ்விப்ட் உற்பத்தி தற்போது அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதுதான். இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவர ஸ்விப்ட்டை விட விஸ்டா காரே சிறந்தது என்று கூறும் அந்த விளம்பரத்தை மீண்டும் உலவ விட்டுள்ளது டாடா.
விஸ்டா விஎக்ஸ் மற்றும் ஸ்விப்ட் விடிஐ ஆகிய டீசல் மிட் வேரியண்ட்டுகளை ஒப்பிட்டு டாடாவின் விளம்பர பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.
இரண்டு கார்களின் டீசல் மாடல்களிலும், 4 சிலிண்டர் கொண்ட 1248சிசி காமன் ரயில் டைரக்ட் இன்ஜெக்ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு கார்களின் எஞ்சின்களும் 75 பிஎஸ் பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் சமமான ஆற்றலை கொண்டுள்ளது.
டாடா இண்டிகா விஸ்டா கார் லிட்டருக்கு 22.3 கிமீ மைலேஜையும், ஸ்விப்ட் கார் லிட்டருக்கு 22.9 மைலேஜையும் கொடுக்கின்றன. மைலேஜில் விஸ்டா சற்று பின்தங்குகிறது. ஆனால், அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களில் விஸ்டாவும் ஒன்று என்பதை நினைவில் கொள்ளவும்.
உள்பக்க வேலைப்பாடுகளில் ஸ்விப்ட்டைவிட கூடுதல் அம்சங்கள் விஸ்டாவில் இருக்கின்றன. டியூவல் டோன் டேஷ் போர்டு, கறுப்பு மற்றும் சஹாரா பியேஜ் இன்டிரியர்ஸ் மற்றும் குஷனுடன் டிரிம் செய்யப்பட்ட உள்பக்க கதவுகள், பேபிரிக் இன்சர்ட்ஸ் ஆகியவை விஸ்டாவில் உள்ளன. இவை ஸ்விப்டில் இல்லை.
யூஎஸ்பி மற்றும் ஆக்ஸ்-இன் கொண்ட இன்டகிரேட்டட் மியூசிக் சிஸ்டம், 5 மொபைல்போன்களுடன் இணைத்துக்கொள்ளும் வசதிகொண்ட புளூ 5 புளூடூத், ஸ்டீயரிக் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், ரியர் வைப்பர், உயரத்தை கூட்டிக்குறைக்கும் வசதிகொண்ட டிரைவர் இருக்கை உள்ளிட்ட விஸ்டா வசதிகள் ஸ்விப்ட்டில் இல்லை.
ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்), எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன்(இபிடி) மற்றும் ரியர் டெமிஸ்ட்டர் ஆகியவை விஸ்டாவில் ஸ்டான்டர்டு அம்சங்களாகவே வருகின்றன. ஆனால், ஸ்விப்டில் இவை தேர்ந்தெடுக்கும் மாடல்களில் மட்டுமே கிடைக்கும்.
விலையிலும் இரண்டு கார்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. விஸ்டாவின் மிட்வேரியண்ட் விஎக்ஸ் ரூ.5.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே, புதிய ஸ்விப்ட்டின் மிட் வேரியண்ட்டான விடிஐ ரூ.5.98 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்று அந்த விளம்பரத்தில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடுகிறது.
இந்த ஒப்பீட்டை காண ஆவலாக பிறக்கிறதா, எமது முகப்பு பக்கத்தில் பிரேக்கிங் நியூஸ் லிங்கை சொடுக்குங்கள்.


Click it and Unblock the Notifications








