ஓசூரில் புதிய கார் தொழிற்சாலை அமைக்க டொயோட்டா திட்டம்!

ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா பெங்களூரின் புறநகர் பகுதியான பிடதியில் இரண்டு கார் தொழிற்சாலைகள் அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.
டொயோட்டாவின் கார் விற்பனை தொடர்ந்து நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த நிதி ஆண்டில் டொயோட்டா நிறுவனம் 1,60,203 கார்களை விற்பனை செய்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்தது.
இந்த நிலையில்,நடப்பு ஆண்டின் முதல் 5 மாதங்களில் டொயோட்டா கார் விற்பனை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. தவிர, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கார் ஏற்றுமதியும் செய்து வருகிறது. இந்தியாவிலிருந்து புதிய வெளிநாடுகளுக்கும் கார் ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
எனவே, உற்பத்தி திறனை அதிகரி்க்கும் நடவடிக்கைகளை டொயோட்டா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டில் பெங்களூரில் உள்ள இரண்டு ஆலைகளின் உற்பத்தி திறனையும் ஆண்டுக்கு 3.1 லட்சம் கார்களாக அதிகரிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, புதிய ஆலையையும் அமைக்க முடிவு செய்துள்ளது. பெங்களூரை ஒட்டியுள்ள தமிழக தொழில்நகரமான ஓசூரில் தனது மூன்றாவது புதிய கார் தொழிற்சாலையை அமைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான, சாதக பாதகங்கள் குறித்து அந்த நிறுவனம் தற்போது ஆய்வுகளை நடத்தி வருகிறது. ஓசூரில் அமைய இருக்கும் கார் ஆலை முற்றிலும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத அம்சங்கள் கொண்ட பசுமை ஆலையாக கட்டுவதற்கும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய ஆலை கட்டுவதற்கான இறுதி முடிவை டொயோட்டா விரைவில் எடு்க்கும் என்று அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஓசூரில் டொயோட்டா ஆலை அமைந்தால் கணிசமான முதலீடும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








