8 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டோ

ஜப்பானிய நிறுவனமான டொயோட்டோ உலக அளவில் கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்திய மார்க்கெட்டிலும் வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
இந்தியாவை மையமாக வைத்து அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த எட்டியோஸ், லிவா கார்கள் குறுகிய காலத்தில் விற்பனையில் ஒரு லட்சம் இலக்கை எட்டியுள்ளன.
இந்த நிலையில், மார்க்கெட் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக அடுத்து 8 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய டொயோட்டோ துணைத் தலைவர் யுகிடோஷி பியூனோ இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," மிகக் குறைந்த விலை காரை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவுமில்லை. அதேவேளை, அமெரிக்க, ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் சிறிய கார்களை விரும்பினால், அதுபற்றி பரிசீலிப்போம்.
அதேவேளை, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட வளரும் மார்க்கெட்டுகளிலிருந்து எங்கள் நிறுவனம் 45 சதவீத விற்பனையை பெற்று வருகிறது. இதை 50 சதவீதமாக அதிகரிக்கும் விதமாக அடுத்தடுத்து 8 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளோம்.
ரூ.6 லட்சம் முதல் விலை கொண்டதாக புதிய மாடல்கள் இருக்கும். இந்த புதிய கார் மாடல்கள் இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி செய்யப்படும். வரும் 2015ம் ஆண்டுக்குள் இந்த புதிய மாடல்களை அனைத்தும் மார்க்கெட்டுக்கு வந்துவிடும்," என்றார்.
இதனிடையே, இதில் சில மாடல்கள் லிவா, எட்டியோஸைவிட குறைவான விலை கொண்டதாக இருக்கும் என்று டொயோட்டோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








