குறைந்த விலை கார் என்ற பேச்சுக்கே இடமில்லை: டொயோட்டோ திட்டவட்டம்

ஆட்டோமொபைல் துறையில் ஜப்பானிய நிறுவனங்கள் சர்வதேச அளவில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில், டொயோட்டோ நிறுவனம் உலகின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக உள்ளது.
இந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் தனது விற்பனை வளர்ச்சியை வெகுவாக கூட்டும் வகையில், குறைந்த விலை கார்களை தயாரிப்பதற்காக தட்சன் கார் பிராண்டை இந்தியா உள்பட சர்வதேச அளவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், டொயோட்டோவும் போட்டிக்கு குறைந்த விலை கார்களை அறிமுகம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இந்த தகவலை டொயோட்டோ திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து டொயோட்டோ சிஇஓ அகியோ டொயோடா கூறுகையில்," "குறைந்த விலை கார்களை தயாரிக்கும் எண்ணம் எதுவும் எங்களிடம் இல்லை. லாப வளர்ச்சியை எட்டுவதற்கு எந்த வகையான கார்களையும் தயாரிக்க தயாராக இருக்கிறோம்.
ஆனால், இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் போன்று குறைந்த விலையில் கார்களை தயாரிக்கும் தொழில்நுட்ப வசதிகள் எங்களிடம் தற்போது இல்லை. நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்தட்டு வாடிக்கையாளர்களை குறிவைத்தே தொடர்ந்து வர்த்தகம் செய்வோம்," என்றார்.
தற்போது டொயோட்டோவின் லிவா கார் ரூ.5 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு குறைவான கார் மாடல்கள் அந்த நிறுவனத்திடம் இல்லை. இதனால், அந்த நிறுவனம் அதிகம் விற்பனையாகும் ரூ.4 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட கார் மார்க்கெட்டில் போட்டி போட முடியாத நிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications








