டெல்லியில் காரை ஓட்டி 6 வயது சிறுமியின் உயிரை பறித்த சிறுவன்!

தெற்கு டெல்லி, ஜெய்த்பூர் பகுதியை சேர்ந்தவர் நீலம். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் தனது 3 குழந்தைகளுடன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
அப்போது வந்த ஆல்ட்டோ கார் ஒன்று குறுகலான அந்த தெருவில் திரும்புவதற்காக பின்புறமாக வந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் வேகமாக வந்து வாசலில் அமர்ந்திருந்த குழந்தைகளை இடித்துத் தள்ளி வீட்டின் கேட்டின் மீது மோதி நின்றது.
இதில், மூன்று குழந்தைகளும் காயமடைந்தனர். கார் வருவதை கண்டு குழந்தையின் தாயார் நீலம் அலறியடித்து தப்பிவிட்டார்.
விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், படுகாயமடைந்த முன்னி(6) இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னோரு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காரை விட்டு விட்டு தப்பி ஓடிய டிரைவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டி வந்தது 14 வயது சிறுவன் என தெரிய வந்தது. அதே பகுதியை சேர்ந்த அவர் 9ம் வகுப்பு படித்து வருகிறான். அவனை பிடித்து சிறார் நல கமிட்டியில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தவறுதலாக பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தி விட்டதாக அந்த சிறுவன் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதனிடையே, வழக்கை திரும்ப பெறுமாறு அச்சுறுத்தல்கள் வருவதாக நீலம் தெரிவித்துள்ளார்.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாத அந்த பையனுக்கு கார் ஓட்ட அனுமதித்த பெற்றோரால் இன்று ஒரு குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. தவிர, மற்றொரு குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம்தான் இதுபோன்ற ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. இனியாவது இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர்கள் கவனமுடன் செயல்படுவது அவசியம்.


Click it and Unblock the Notifications








