களை கட்டிய கார், பைக் மார்க்கெட்: செப்டம்பர் அறிமுகங்கள் ஒரு பார்வை
பண்டிகை காலம் துவங்கியுள்ளதையடுத்து அடுத்தடுத்து புதிய கார் மற்றும் பைக் மாடல்களை மார்க்கெட்டில் அறிமுகமாகின்றன. செப்டம்பரில் பல புதிய கார் மற்றும் பைக்குகள் அறிமுகமாக உள்ளன. அவற்றின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.
ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிமுக தேதி மற்றும் இதர விபரங்களில் மாற்றம் இருக்கலாம். எனவே, கார், பைக் மார்க்கெட் பற்றிய உடனடி தகவல்களுக்கு டிரைவ்ஸ்பார்க் தளத்தை பின்தொடருங்கள்.

யமஹா ரே:
யமஹா நிறுவனம் முதன்முறையாக ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இறங்குகிறது. தனது முதல் ரே ஸ்கூட்டரை நாளை விற்பனைக்கு கொண்டு வருகிறது. கச்சிதமான வடிவமைப்பால் 125 சிசி எஞ்சினுடன் விற்பனைக்கு வரும் இந்த புதிய ஸ்கூட்டரின் வடிவமைப்பு யுவதிகளை வெகுவாக கவரும் என நம்பலாம். ஏற்கனவே புக்கிங் துவங்கப்பட்டுவிட்ட நிலையில், இதுவரை 15,000 புக்கிங்குகளை பெற்று பெரும் பலத்துடன் களமிறங்குகிறது யமஹா ரே.

மாருதி புதிய ஆல்ட்டோ 800
இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த 800 காருக்கு மாற்றாக புதிய 800 காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ஆல்ட்டோ 800 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய கார் ரூ.2 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்ற தகவல்களால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை மறுதினம் இந்த புதிய காரை மாருதி அறிமுகப்படுத்த திட்டமி்ட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், மாருதி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

பென்ஸ் பி கிளாஸ்
18ந் தேதி பென்ஸ் அறிமுகப்படுத்த இருக்கும் பி கிளாஸ் கார் சொகுசு கார் மார்க்கெட்டில் குறைந்த விலை கார் என்பதோடு, முதல் ஹேட்ச்பேக் காராகவும் களமிறங்குகிறது என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இந்த புதிய பென்ஸ் கார் ரூ.25 லட்சத்திற்குள் விற்பனைக்கு வர இருக்கிறது.

மஹிந்திரா குவான்ட்டோ
20ந் தேதி குவான்ட்டோ காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா. ஸைலோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டிருப்பதோடு, 7 பேர் பயணம் செய்யும் வசதியையும் கொண்டிருக்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் இந்த புதிய கார் அதிக மைலேஜ் கொடுக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய கார் வரும் என தெரிகிறது.

மஹிந்திரா குவான்ட்டோ
மாருதி எர்டிகா, மஹிந்திரா ஸைலோ, டொயோட்டா இன்னோவா ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் ரகத்தில் வரும் மினி வேன்தான் நிசான் எவாலியா. வரும் 26ந் தேதி எவாலியாவை நிசான் விற்பனைக்கு கொண்டு வருகிறது. 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினுடன் வரும் புதிய எவாலியாவில் 7 பேர் பயணம் செய்யலாம். ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எவாலியா விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 27ந் தேதி சென்னையில் இந்த மினிவேனை நிசான் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

டிவிஎஸ் ஃபீனிக்ஸ்
டிவிஎஸ் மோட்டார்ஸ் பெரும் எதிர்பார்ப்புடன் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய 125சிசி பைக். இந்த மாதத்திற்குள் அறிமுகமாக இருக்கும் ஃபீனிக்ஸ், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களுடன் வருகிறது. ஹோண்டா ஷைன் மார்க்கெட்டை குறிவைத்து ஃபீனிக்ஸ் பைக்கை களமிறக்குகிறது டிவிஎஸ். விற்பனையில் சோர்ந்து போயிருக்கும் டிவிஎஸ் மோட்டார்சுக்கு சுளுக்கெடுக்குமா ஃபீனிக்ஸ்.


Click it and Unblock the Notifications








