செடான் கார்களை ஓவர்டேக் செய்த யுட்டிலிட்டி ரக கார்கள்
செடான் கார் விற்பனையை தொடர்ந்து விஞ்சி வருகிறது யுட்டிலிட்டி ரக கார்களின் விற்பனை. நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் செடான் கார் விற்பனையை பின்னுக்குத் தள்ளி யுட்டிலிட்டி கார்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது.
ஹேட்ச்பேக் கார்கள் விற்பனைக்கு அடுத்ததாக செடான் கார் விற்பனை இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது. இந்த இடத்தை எஸ்யூவி, எம்யூவி, எம்பிவி உள்ளடக்கிய இந்த கார் மார்க்கெட் தற்போது யுட்டிலிட்டி ரகத்தை சேர்ந்த கார்கள் பெற்றுள்ளன.

மஹிந்திராவின் எக்ஸ்யூவி 500 மற்றும் மாருதி எர்டிகா உள்ளிட்ட புதிய மாடல்களின் வரவால் யுட்டிலிட்டி ரக கார் விற்பனை அசுரத்தனமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 2.08 லட்சம் யுட்டிலிட்டி ரக கார்கள் விற்பனையாகி 57.03 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதே காலகட்டத்தில் 1.97 லட்சம் செடான் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15 சதவீத வளர்ச்சியாகும்.
ஒட்டுமொத்தத்தில் நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் 10.5 லட்சம் கார்கள் விற்பனையாகி 7.42 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இதேகாலகட்டத்தில் கார் மார்க்கெட் விற்பனை பங்களிப்பில் முதல் இடத்தில் இருக்கும் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை 6 சதவீதம் சரிவு கண்டிருக்கிறது.
ஹேட்ச்பேக் கார் விற்பனையில் சரிவு:
கடந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் 59 சதவீத பங்களிப்பை கொண்டிருந்த விற்பனை நடப்பு நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 53 சதவீத பங்களிப்பை மட்டுமே வழங்கியிருக்கிறது. இது 3.36 சதவீதம் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே, யுட்டிலிட்டி ரக கார்களின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கும் நிலை இருக்கிறது. ஏனெனில், மஹிந்திரா எக்ஸ்யூவி, மாருதி எர்டிகா, டஸ்ட்டர் ஆகியவற்றின் புக்கிங் எண்ணிக்கை தற்போது 50,000ஆக இருக்கிறது. இதுதவிர, ஏராளமான புதிய மாடல்களும் வர இருப்பதால் யுட்டிலிட்டி ரக கார் மார்க்கெட் வலுவாக மாறி வருகிறது.
புதுமையான வசதிகள், நிறைந்த பாதுகாப்பு அம்சங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைப்பது என பல கூடுதல் சிறப்பம்சங்களால் யுட்டிலிட்டி கார்கள் பக்கம் வாடிக்கையாளர் கவனம் திசை மாறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








