விற்பனை சரிவு: போக்ஸ்வேகன் தலைகள் ராஜினாமா?

கடந்த ஆண்டு முதலே போக்ஸ்வேகனின் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பெறவில்லை. மேலும், அடுத்த 2 ஆண்டுகளில் மார்க்கெட்டில் 10 சதவீத பங்களிப்பை பெற வேண்டும் என்ற இலக்கை அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விற்பனை சரிவுக்கு பொறுப்பேற்று அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் நீரஜ் கார்க் விலக முடிவு செய்துள்ளார். போக்ஸ்வேகன் மட்டுமின்றி ஆடி, ஸ்கோடா உள்ளிட்ட போக்ஸ்வேகனின் 6 பிராண்டுகளுக்கும் அவர்தான் மார்க்கெட்டிங் பிரிவு பொறுப்பாளராக இருக்கிறார்.
இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் போக்ஸ்வேனின் விற்பனைப் பிரிவு தலைவர் சந்தீப் மந்த்ரேக்கரும் விலக முடிவு செய்துள்ளார். இருவருமே ராஜினாமா கடிதத்தை போக்ஸ்வேகன் தலைமைக்கு அனுப்பிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
நீரஜ் கார்க்குக்கு பதவி உயர்வு கொடு்த்து சீனப் பிரிவில் பணியாற்றுவதற்கு போக்ஸ்வேகன் வாய்ப்பு வழங்கியது. ஆனால், பணியாற்ற விருப்பமில்லை என போக்ஸ்வேகன் கொடுத்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த இருவரின் இடங்களையும் மாருதியின் உயரதிகாரிகள் நிரப்ப உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மாருதியின் தலைமை பொதுமேலாளர் சசாங்க் வத்சவாவை போக்ஸ்வேகனின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனராகவும், மாருதியின் ட்ரூ வேல்யூ யூஸ்டு கார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பொது மேலாளராக இருக்கும் பங்கஜ் ஷர்மா போக்ஸ்வேகனின் விற்பனைப் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இருவருக்கும் 'ஹெவி பேக்கேஜ்' கொடுத்து போக்ஸ்வேகன் வலைவீசி வளைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications