மணிக்கு 300 கிமீ வேகத்தில் பறந்த போக்ஸ்வேகன் ஜெட்டா ஹைபிரிட்

ஹைபிரிட் கார் என்றவுடன் அதன் மைலேஜ்தான் அனைவருக்கும் நினைவில் எழும். ஆனால், முதன்முறையாக அதிவேகத்தில் பறந்து போக்ஸ்வேகன் ஜெட்டா ஹைபிரிட் கார் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
கலிஃபோர்னியாவில் உள்ள போனிவில்லி சால்ட் பிளாட்டில்தான் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரபல மோட்டார் டிரென்ட் இதழும், போக்ஸ்வேகனும் இணைந்து இந்த நடத்திய வேகத் திறனாய்வு போட்டியில்தான் போக்ஸ்வேகன் ஜெட்டா ஹைபிரிட் கார் இந்த புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
ஹைபிரிட் ஜெட்டா மணிக்கு அதிகபட்சமாக 298.363 கிமீ வேகத்தை எட்டியதாக மோட்டார் டிரென்ட் அசோசியேட் ரோடு டெஸ்ட் எடிட்டர் கார்லஸ் லாகோ பதிவு செய்துள்ளார். இந்த ஹைபிரிட் ஜெட்டா காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.
இந்த எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், இதற்கு துணைபுரிந்த எலக்ட்ரிக் மோட்டார் 27 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டிஎஸ்ஜி 7 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இந்த காரில் பொருத்தப்பட்டிருந்தது.
அதிவேக திறனாய்வு சோதனைக்காக இந்த காரின் எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவை டியூனிங் செய்யப்பட்டிருந்தது. ஜெர்மனியின் வோல்ப்பர்க்கிலுள்ள போக்ஸ்வேகன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சேர்ந்த எஞ்சினியர்கள் இந்த மாறுதல்களை செய்தனர்.
உலகின் அதிவேக ஹைபிரிட் கார் என்ற பெருமையை ஜெட்டா கார் பெற்றுள்ளது மிகவும் பெருமை அளிக்கும் விஷயம் என போக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மோட்டார் டிரென்ட் இதழின் தலைமை ஆசிரியர் ஈத் லோ கூறுகையில்," போக்ஸ்வேகனுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டதை கவுரமாக கருதுகிறோம்.
எங்களது இதழின் 11 லட்சம் வாசகர்கள் மற்றும் 30 லட்சம் ஆன்லைன் வாசகர்களுடன் இந்த பதிவை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இதைவிட அதிவேகம் கொண்ட ஜெட்டா ஹைபிரிட் கார் மீண்டும் இங்கு வந்து புதிய சாதனை படைக்கும் என நம்புகிறோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








