சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் காராக வோக்ஸ்வேகன் போலோவுக்கு விருது

ஆட்டோமொபைல் ஆய்வுகளை வெளியிட்டு வரும் ஜே.டி.பவர் நிறுவனம் இந்தியாவின் சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் கார் குறித்து ஆய்வு நடத்தியது.
ஓட்டுதல் தரம், கையாளுமை, பாதுகாப்பு, கட்டுமானம் மற்றும் எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் முதல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 8,000 பேரிடம் இதுகுறித்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் அனைத்து விதத்திலும் சிறந்த காராக வோக்ஸ்வேகன் போலோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, போலோ காருக்கு சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் என்ற பெருமைமிக்க விருதை ஜே.டி.பவர் நிறுவனம் வழங்கியுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த வோக்ஸ்வேகன் போலோ கார் வெற்றிகரமான மாடலாக திகழ்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் போலோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.2 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் 22.07 கிமீ மைலேஜையும் தருவதாக வோக்ஸ்வேகன் தெரிவிக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் வரை இதுவரை 65,127 போலோ கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








