புனேயில் தீப்பிடித்து எரிந்த வென்ட்டோ கார்: உரிமையாளர் படுகாயம்

புனேயை சேர்ந்தவர் கைலாஷ் சுரேஷ் குப்தா(40). இவர் தனது வென்ட்டோ காரில் அங்குள்ள பெர்குஷன் கல்லூரிக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு வந்தார்.
சாலை ஓரம் காரை நிறுத்திவிட்டு சென்ற அவர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து காரை ஸ்டார்ட் செய்ய முயன்றார். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக கார் எஞ்சின் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது.
உடனடியாக காருக்குள் இருந்து குப்தா வெளியேற முயன்றார். ஆனால், முடியாததால் உதவி கேட்டு கூச்சலிட்டார். குப்தாவின் அலறலை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து காருக்குள் சிக்கிக்கொண்ட குப்தாவை காரின் கண்ணாடியை உடைத்து அவரை வெளியே கொண்டு வர முயன்றனர்.
ஆனால், அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் வெளியே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அவரை வெளியே கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உடனடியாக குப்தாவை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் காரில் பற்றிய தீயை அணைத்தனர். குப்தாவுக்கு 60 சதவீதம் அளவுக்கு உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து குப்தாவின் சகோதரர் கூறுகையில்,"கடந்த ஆண்டுதான் இந்த காரை குப்தா வாங்கினார். வாங்கி ஓர் ஆண்டு கூட ஆகாத நிலையில் அந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து வோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் தகவல் தெரியப்படுத்தியிருக்கிறோம்.
கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக ஜெர்மனியிலிருந்து எஞ்சினியர்கள் இந்தியா வருகின்றனர்," என்றார்.


Click it and Unblock the Notifications








