பார்முலா-1 டிராக்கில் சூப்பர் கார் ஓட்டி அசத்திய யுவராஜ் சிங்
டெல்லி, நொய்டாவிலுள்ள பார்முலா ஒன் ரேஸ் டிராக்கில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது லம்போர்கினி சூப்பர் காரை அசுர வேகத்தில் ஓட்டி வந்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய யுவராஜ் சிங் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய யுவி தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.

மேலும், சிகிச்சையினால் ஏற்பட்ட உடற்சோர்வு மற்றும் மனச் சோர்வை நீக்கும் வகையில் பயிற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறார். மேலும், முன்பைவிட தன்னை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயன்று வருகிறார்.
கடந்த மாதம் 28ந் தேதி நடந்த புனே வாரியர்ஸ்-டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் போட்டியை காண வந்த அவர், போட்டிக்கு முன் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களுடன் சேர்ந்து தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல் சிறிது நேரம் கிரிக்கெட் ஆடினார்.
இது அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களையும் இன்பவெள்ளத்தில் ஆழ்த்தியது. இதேபோன்று, தற்போது நொய்டாவில் உள்ள பார்முலா-1 கார் பந்தய மைதானத்தில் லம்போர்கினி சூப்பர் காரை ஓட்டி அனைவரையும் அசர வைத்துள்ளார் யுவி.
தனது நண்பரும், நடிகருமான ரன்விஜயுடன் லம்போர்கினி மியூலேகோ சூப்பர் காரில் அவர் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் ஒரு ரவுண்டு ஓட்டி வந்தார். இது அவரது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
யுவராஜ் சிங் வைத்திருக்கும் லம்போர்கினி மியூசிலேகோ கார் தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த கார் ரூ.3 கோடி விலை கொண்டது. 6.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 340 கிமீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் வாய்ந்தது.


Click it and Unblock the Notifications








