ஆர்15 எல்லாம் இனி ஓரம் நிக்க வேண்டியதுதான்... சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளை தான் இனி எல்லாரும் தேட போறாங்க!!
இந்தியாவில் மோட்டார்சைக்கிள் சந்தையில் பெரிதும் கண்டுக்கொள்ளப்படாத சப்-பிராண்ட் என்றால் அது சுஸுகி ஜிக்ஸெர் தான். வெளிநாடுகளில், குறிப்பாக ஜப்பானிய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ஜிக்ஸெர் பைக்குகள் நம் இந்தியாவில் ஏனோ வாடிக்கையாளர்களை கவருவதில்லை. இந்தியாவில் ஜிக்ஸெர் பைக்குகள் இரு விதமான பாடி ஸ்டைல்களிலும், இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஜிக்ஸெர் என்ற பெயர் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுபவை நாக்டு ரக பைக்குகளாகவும், கூடுதலாக எஸ்.எஃப் பெயரை கொண்டவை ஸ்போர்ட் ரக பைக்குகளாகவும் உள்ளன. அத்துடன் 150சிசி மற்றும் 250சிசி என பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான வேரியண்ட்களில் கிடைக்கும் சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகள் 2023ஆம் ஆண்டிற்கான அப்டேட்கள் உடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டிற்கான அப்டேட்களாக புதிய பெயிண்ட் தேர்வுகளும், ப்ளூடூத் இணைப்பு வசதியும் ஜிக்ஸெர் பைக்குகளில் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ப்ளூடூத் இணைப்பு வசதி ஆனது ஏற்கனவே சுஸுகி வி-ஸ்ட்ரோம் 250 எஸ்.எக்ஸ் பைக்கில் இடம்பெற்று வருகிறது. இந்த அட்வான்ஸ்டு அப்டேட்களின் மூலம் ஜிக்ஸெர் பைக்குகளின் விற்பனை இந்தியாவில் மேம்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 என்ற இரண்டு பைக்குகளையும் மொத்தமாகவே வெறும் 8 யூனிட்கள் மட்டுமே சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
மறுப்பக்கம், 150சிசி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்.எஃப் பைக்குகள் மொத்தமாக கடந்த நவம்பரில் 649 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதே நவம்பர் மாதத்தில், இந்த ஜிக்ஸெர் பைக்குகளுக்கு விற்பனையில் போட்டியாக உள்ள யமஹா ஆர்15 பைக்குகள் 7,427 யூனிட்களும், யமஹா எம்டி-15 பைக்குகள் 6,335 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டன. ஏற்கனவே கூறியதுபோல், 2023 ஜிக்ஸெர் பைக்குகளுக்கு புதிய பெயிண்ட் தேர்வுகளையும் சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

இதன்படி, 150சிசி ஜிக்ஸெர் பைக்குகள் இரண்டிற்கும் மெட்டாலிக் சோனிக் சில்வர்/ பேர்ல் பிளாஸ் ஆரஞ்சு, மெட்டாலிக் ட்ரைடன் நீலம் மற்றும் பளபளப்பான ஸ்பார்கிள் கருப்பு என்ற 3 புதிய பெயிண்ட் தேர்வுகளும், ஜிக்ஸெர் 250 ஸ்ட்ரீட் பைக்கிற்கு மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் நீலம் மற்றும் மெட்டாலிக் மேட் கருப்பு நம்பர்.02 என்ற 2 புதிய பெயிண்ட் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஜிக்ஸெர் 250 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நிறத்தேர்வுகளுடன், ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 பைக்கிற்கு கூடுதலாக மெட்டாலிக் சோனிக் சில்வர்/ மெட்டாலிக் ட்ரைடன் நீலம் என்ற பெயிண்ட் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பெயிண்ட் தேர்வுகளுடன் 2023 சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மூலமாக சில அட்வான்ஸான விபரங்களை இன்ஸ்ட்ரூமெண்ட் திரையின் வழியாக பெற முடியும்.

மொபைல் போன் இன்கம்மிங் கால், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் அலார்ட், மிஸ்டு கால்கள், ஹை ஸ்பீடு எச்சரிப்புகள், போன் பேட்டரி லெவல் டிஸ்பிளே மற்றும் பயணத்திற்கான நேரம் உள்ளிட்டவை இந்த அட்வான்ஸ்டு விபரங்களில் அடங்குகின்றன. ஜிக்ஸெர் பைக்குகளின் இந்த புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் திரை ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே சாதனங்களுடன் இணையக்கூடியது. அத்துடன் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷனையும் பெறலாம்.
2023 ஜிக்ஸெர் 150 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1,40,500 ஆகவும், ஜிக்ஸெர் எஸ்.எஃப் 150 பைக்கின் விலை ரூ.1,45,500, ஜிக்ஸெர் 250 -இன் விலை ரூ.1,95,000 மற்றும் ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 -இன் விலை ரூ.2,02,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மெட்டாலிக் சோனிக் சில்வர்/ மெட்டாலிக் ட்ரைடன் நீல நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 பைக்கின் எக்ஸ்டார் எடிசனின் விலை ரூ.2,02,500 ஆகும்.


Click it and Unblock the Notifications








