யூஸ்டு-கார்களை இதுக்கு அப்புறம் ஆவது தைரியமாக வாங்கலாமா? மத்திய அரசின் வாகன அழிப்பு கொள்கை!
அரசாங்கத்தின் வாகன அழிப்பு கொள்கை (Vehicle Scrappage Policy), பழைய வாகனங்களை மக்களின் பயன்பாட்டில் இருந்து அகற்றுவதன் மூலம் யூஸ்டு-கார் சந்தையின் மதிப்பை அதிகரிக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பது உங்களில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம். இந்த தொகுப்பில் அதைதான் விளக்கி கூற போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
பழைய, அதிக மாசுபடுத்தும் வாகனங்களை புழக்கத்தில் இருந்து நீக்குவதன் மூலம், மத்திய அரசாங்கத்தின் வாகன அழிப்பு கொள்கை யூஸ்டு-கார் தொழிலை முறைப்படுத்துகிறது. அதாவது, மிகவும் பழைய கார்களை யூஸ்டு-கார் சந்தைக்கு கொண்டு செல்லாமல், அவற்றை முறையாக அழித்து அதன் மூலம் கிடைக்கும் சிறு சிறு சலுகைகளை பெற மக்களை ஊக்கப்படுத்தும்.

இதன் விளைவாக இளைய, உயர்தர யூஸ்டு கார்கள் யூஸ்டு-கார் சந்தைக்கு வரும். பழைய வாகனங்களை (10- 15+ ஆண்டுகள் பழையது) வைத்திருப்பதை வாகன அழிப்பு கொள்கை ஊக்கப்படுத்துவதில்லை. அதிக மறு ஆர்டிஓ பதிவு கட்டணங்கள் மற்றும் சாலை வரிகள் போன்ற தடைகள் மூலம் அத்தகைய பழைய வாகனங்களின் மதிப்பை குறைக்கிறது.
குறிப்பாக டீசல் வாகனங்களுக்கான கடுமையான விதிமுறைகள் காரணமாக அவற்றின் சந்தை மதிப்பு வெகுவாக குறையும். பழைய வாகனங்களை முறையாக ஸ்கிராப் செய்யும்போது உரிமையாளர்களுக்கு நியாயமான ஸ்கிராப் மதிப்பு (புதிய வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலையில் பொதுவாக 4% முதல் 6% வரை) கிடைக்கிறது. இது புதிய வாகனத்தை குறைந்த விலையில் வாங்க உதவும்.

இதனால் பழைய கார்களை வைத்திருப்பது நிதி ரீதியாக லாபமற்றதாகிறது. இதன் எதிரொலியாக, சந்தையில் மீதமுள்ள குறைந்த ஆயுள் கொண்ட பழைய கார்களை யூஸ்டு-கார் மார்க்கெட்டில் வாங்க மக்கள் தயங்குவார்கள். இது பழைய வாகனங்களுக்கான தேவை மற்றும் விலையை குறைக்கும். இதன் விளைவாக, யூஸ்டு-கார் மார்க்கெட் சுருங்கும் என்றாலும், ஒரு பக்கம் யூஸ்டு-கார்களை வாங்குவதற்கும் எப்போதும் போல் கஸ்டமர்கள் இருப்பார்கள்.
வாகன அழிப்பு கொள்கையினால் கார்களின் சராசரி ஆயுட்காலம் குறையும் என்பதால், புதிய கார்கள் சில வருடங்களில் யூஸ்டு-கார் மார்க்கெட்டில் வர துவங்கிவிடும். பழைய, அதிக மைலேஜ் கொண்ட கார்கள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்படுவதால், 3-8 ஆண்டுகள் மட்டுமே பழமையான நம்பகமான மற்றும் எரிபொருள் திறன் கொண்ட இளம் மற்றும் பிரீமியம் யூஸ்டு-கார்களுக்கான தேவை அதிகரிக்கும்.

இந்த தேவை அதிகரிப்பு, யூஸ்டு-கார் சந்தைக்கு வரும் இளம் கார்களுக்கான விலைகளை வழக்கத்தை காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே நிர்ணயிக்கும். சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைப் பொறுத்தவரை, உரிமையாளர்கள் அவற்றை புதிய கார் வாங்கும்போது ஷோரூம்களில் எக்ஸ்சேஞ்ச் முறையில் மாற்றுவார்கள் என்பதால், வாகன அழிப்பு கொள்கை யூஸ்டு-கார் சந்தையில் இளைய, உயர்தர யூஸ்டு கார்களின் வரத்தை அதிகரிக்கும்.
இதன் மூலமாக, அவற்றை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து, சொகுசு யூஸ்டு-கார்களுக்கான தேவையும் அதிகரிக்கும். அரசாங்கத்தின் இந்த கொள்கை, பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதிகள் (RVSFs) மற்றும் தானியங்கி சோதனை நிலையங்கள் (ATS) ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் யூஸ்டு-கார் மற்றும் உதிரி பாகங்கள் சந்தைகளை ஒழுங்கமைக்க உதவும்.

முறைசாராத வழிமுறைகளில் இருந்து முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளுக்கு மாறுவது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் உள்ள அபாயத்தை குறைக்கும். முறையான சான்றிதழ் மற்றும் தெளிவான வாகன வரலாறு போன்ற முறையான அமைப்பு, வெளிப்படைத்தன்மையை அதிகரித்து நுகர்வோர்கள் இடையே நம்பிக்கையை உருவாக்கும்.
யூஸ்டு-வாகனங்களை வாங்குபவர்கள் முறையான வழிகள் மூலம் விற்கப்படும் வாகனங்களை நம்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இது சான்றளிக்கப்பட்ட யூஸ்டு-கார்களின் மதிப்பை அதிகரிக்கும். முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் உத்தரவாதங்கள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் போன்ற தரப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதால், சந்தையில் யூஸ்டு-கார்களின் ஒட்டுமொத்த தரம் மற்றும் நம்பகத்தன்மை மேம்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா விஷயங்களையும் எதிர்காலத்தில் நடக்க இருப்பது போல் ஏன் கூறுகிறோம் என்றால், வாகன அழிப்பு கொள்கை ஆனது இன்னும் நாடு முழுவதும் தீவிரமாக கொண்டுவரப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இந்த திட்டம் முறையாக நடைமுறைக்கு வந்தால்தான் யூஸ்டு-கார் மார்க்கெட்டின் மதிப்பு உயர்வது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications









