பஜாஜ் ஆர்இ60 விற்பனைக்கு தயார்: அனுமதி கிடைக்காததால் தாமதம்

இருசக்கர வாகன மார்க்கெட்டிலும், மூன்று சக்கர வாகன மார்க்கெட்டிலும் முன்னிலை வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆர்இ-60 என்ற பெயரில் தனது முதல் நான்கு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாகனம் தற்போது விற்பனைக்கு தயாராக இருக்கிறது.
ஆனால், புதிய ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்துக்கு எந்த பிரிவில் அனுமதி வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிது. மேலும், இதற்காக, குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அனுமதி வழங்கியவுடன் ஆர்இ-60 விற்பனைக்கு வரும்.
இதுகுறித்து பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் குறிப்பிடுகையில்,"மத்திய குழு அனுமதி கிடைத்தவுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படும். 216சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த வாகனம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ மைலேஜ் தரும். மாதத்துக்கு 5,000 ஆர்இ-60 வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்," என்றார்.
பஜாஜ் ஆட்டோவின் வர்த்தக வாகனங்கள் பிரிவு தலைவர் மகேஸ்வரி கூறும்போது,"இந்த புதிய ரக வாகனத்தை வடிவமைக்க ஏற்கனவே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்டோரிக்ஷாவுக்கும், காருக்கும் இடையிலான குவாட்ரிசைக்கிள் என்ற புதிய ரகத்தில் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளோம். இதுகுறித்து அமைக்கப்பட்ட குழு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








