ரூ.3.10 கோடியில் புதிய பென்ட்லி ப்ளையிங் ஸ்பர் ஆடம்பர கார் அறிமுகம்
ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் காருக்கு போட்டியை கொடுக்கும் பவர் கொண்ட புதிய ப்ளையிங் ஸ்பர் ஆடம்பர காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பென்ட்லி.
4 கதவுகள் கொண்ட அதிவேக பென்ட்லி கார் என்ற பெருமையுடன் வந்திருக்கும் இந்த புதிய மாடல் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாற்றங்கள்
முந்தைய மாடல் அதிக அளவில் விபத்துக்களில் சிக்குவதாக புகார்கள் எழுந்தன. அதனை களைந்து கூடுதல் சிறப்புகளுடன் வந்துள்ளது. கூரை தாழ்வாக்கப்பட்டு பின்புறம் டிசைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், காரின் சமநிலை கூடுதலாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 600 புதிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளாக பென்ட்லி தெரிவிக்கிறது.

இன்டிரியர்
இன்டிரியரில் மேம்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகள்
8 இஞ்ச் டச் ஸ்கிரீனுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 1100 வாட்ஸ் கொண்ட பென்ட்லியின் சொந்த தயாரிப்பான 8 ஸ்பீக்கர்கள் கொண்ட நயீம் ஆடியோ சிஸ்டம், பின்புற பயணிகளுக்கு 10 இஞ்ச் எல்சிடி தொடுதிரைகள், வைஃபை கனெக்ஷன், சேட்டிலைட் நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் கமான்ட் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

அடாப்டிவ் சஸ்பென்ஷன்
சாலையில் இருக்கும் பள்ளம் மேடுகளை சென்சார், கேமரா உதவியுடன் உணர்ந்து கொண்டு முன்கூட்டியே அதற்கு தக்கவாறு மாறிக் கொள்ளும் வசதி கொண்ட அடாப்டிவ் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால், பள்ளம், மேடுகளில் பக்குவமாய் பயணிக்கும்.

எஞ்சின்
கான்டினென்டல் ஜிடி காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 6.0 லிட்டர் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 616 பிஎச்பி ஆற்றலையும், 800 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
8 ஸ்பீடு இசட்எஸ்எஃப் டிரான்ஸ்மிஷனுடன் வரும் இந்த புதிய கார் 0- 100 கிமீ வேகத்தை 4.3 வினாடிகளில் தொட்டுவிடும் சக்தி கொண்டது. மணிக்கு அதிகபட்சமாக 322 கிமீ வேகத்தில் செல்லும்.

மைலேஜ்
ஒரு லிட்டருக்கு 6.8 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுதல் முறைக்கு ஏற்ப மாறுபடலாம்.

இருக்கை வசதி
4 மற்றும் 5 பேர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்ட இரு மாடல்களில் கிடைக்கும். ரூ.3.10 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








