சிட்டி, வெர்னாவைவிட குறைவான விலையில் வந்த ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்!
எதிர்பார்த்தபடியே ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டீசல் மாடலில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஃபியஸ்ட்டா மாடல் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.
புதிய ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களைவிட மிக அதிக வித்தியாசம் கொண்ட விலைகளிலும், சிறப்பான தொழில்நுட்ப வசதிகளுடன் வந்திருப்பதால் ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் கலக்கும் என எதிர்பார்க்கலாம்.

வேரியண்ட்டுகள்
ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் ஆகிய மூன்று டீசல் வேரியண்ட்டுகளில் ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் கிடைக்கும்.
வேரியண்ட் வாரியாக முக்கிய வசதிகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மேம்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டியூராடார்க் டீசல் எஞ்சினில் சிறிய மாற்றங்கள் செய்து பொருத்தியுள்ளனர். இப்போது 91 பிஎஸ் பவரையும், 204 என்எம் டார்க்கையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

சிறந்த மைலேஜ்
ஏரோடைனமிக் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் மற்றும் மைலேஜை தரும். புதிய ஃபியஸ்ட்டா மாடல் லிட்டருக்கு 25.01 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று கூறுகிறது. இந்த சிறப்பான மைலேஜும் ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு விற்பனையில் பக்கபலமாக இருக்கும்.

விலை விபரம்
ஆம்பியன்ட் பேஸ் வேரியண்ட் ரூ.7.69 லட்சம் விலையிலும், டிரென்ட் ரூ.8.56 லட்சம் விலையிலும், டைட்டானியம் டாப் வேரியண்ட் ரூ.9.29 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். போட்டியாளர்களான சிட்டி, வெர்னா கார்களைவிட வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.67,000 முதல் ரூ.1.7 லட்சம் வரையில் ஃபியஸ்ட்டா குறைவான விலையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலை ஒப்பீடு
ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடல் ரூ.8.37 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரையிலான விலையிலும், ஹூண்டாய் வெர்னா கார் ரூ.8.36 லட்சம் முதல் ரூ.10.80 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் கிடைக்கிறது. குறிப்பாக, ஃபோர்டு சிங்க் உள்ளிட்ட பல சூப்பரான வசதிகளை உள்ளடக்கிய ஃபோர்டு ஃபியஸ்ட்டா டைட்டானியம் டாப் வேரியண்ட் போட்டியாளர்களைவிட ரூ.1.5 லட்சம் வரை குறைவான விலையில் கிடைப்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications








