புதிய டீசல் எஞ்சினுடன் ஹோண்டா களமிறக்கும் 5 புதிய கார்களின் விபரம்
அமேஸ் செடான் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை மேலும், 4 கார்களில் பொருத்த இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த கார்களில் பொருத்தப்பட இருக்கிறது என்ற விபரத்தை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.
ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஆலையை விரிவுப்படுத்துவதற்காக ரூ.2,500 கோடியை புதிதாக முதலீடு செய்கிறது ஹோண்டா கார் நிறுவனம். இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது 5 கார்களில் புதிய டீசல் எஞ்சின் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

ஹோண்டா பிரியோ
பிரியோ ஹேட்ச்பேக் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஜாஸ்
விற்பனை இல்லாததால் ஜாஸ் கார் உற்பத்தியை சமீபத்தில் நிறுத்தியது ஹோண்டா. இந்தநிலையில், அடுத்த ஆண்டு அடுத்த தலைமுறை ஜாஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்த ஹோண்டா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

புதிய சிட்டி
புதிய சிட்டி செடான் காரில் விஜிடி டர்போ சார்ஜர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. சிட்டி காருக்காக டர்போ சார்ஜருடன் புதிய ஐ- டிடெக் டீசல் எஞ்சின் அதிக பவர் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும்.

புதிய எஸ்யூவி/ எம்பிவி
ஜாஸ் அடிப்படையில் வடிவமைக்கப்படும் கிராஸ்ஓவர் எஸ்யூவி அல்லது பிரியோ அடிப்படையில் வடிவமைக்கப்படும் எம்பிவி காரை ஹோண்டா அறிமுகப்படுத்த உள்ளது. இதிலும், புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.

ஹோண்டா அமேஸ்
அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கும் அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் 100 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் அதேவேளையில், லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

டீசல் மயம்
நம் நாட்டில் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சின் 14 கார் மாடல்களிலும், ரெனோவின் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் ரெனோ மற்றும் நிசான் கார் மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டீசல் எஞ்சின் கோதாவில் ஹோண்டாவும் குதிக்க உள்ளது.

மாருதியுடன் போட்டி
அடுத்தடுத்து புதிய டீசல் மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மார்க்கெட்டில் 50 சதவீத பங்களிப்பை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இந்த புதிய மாடல்கள் அடுத்த 3 ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று ஹோண்டா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹோண்டாவின் இலக்கு (கனவு) பலிக்க வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications








