ஹேட்ச்பேக் உள்பட 3 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்

நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நிறுவனங்களின் வரவால் விற்பனை வளர்ச்சியில் சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் அந்த நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷின் ஷியோ கூறியதாவது," காம்பெக்ட் எஸ்யூவி, எம்பிவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, மாருதி எர்டிகா, ரெனோ டஸ்ட்டர் ஆகிய கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
இதனை கவனத்தில்கொண்டு புதிய எஸ்யூவி, எம்பிவி கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம். மேலும், ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையில் புதிய ஹேட்ச்பேக் காரையும் அறிமுகம் செய்ய உள்ளோம்,"என்றார்.
இதனிடையே, ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஹேட்ச்பேக் கார் ஐ15 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய புளுயிடிக் ஐ10 என்ற பெயரில் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக நாம் ஏற்கனவே தெரிவித்த கார்தான் இது என தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஐ10 கார் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்றும் ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








