ரூ.4.09 லட்சத்தில் மாருதி ஸ்டிங்ரே அறிமுகம் - விபரம்
ரூ.4.09 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்டிங்ரே விற்பனைக்கு வந்துள்ளது. வேகன் ஆர் மாடலின் திருத்தியமைக்கப்பட்ட மாடலான ஸ்டிங்ரே தோற்றத்திலும், வசதிகளிலும் கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது. வேகன் ஆர் காரின் விலையைவிட ரூ.50,000 கூடுதலான விலையில் வந்திருக்கிறது.
வேகன் ஆர் ஸ்டிங்ரே என்று அழைக்காமல் வெறும் ஸ்டிங்ரே என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும். எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஆகிய இரண்டு பெட்ரோல் வேரியண்ட்களில் தேர்வு செய்யலாம். விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் ஆப்ஷனல் பேக்கேஜுடனும் கிடைக்கும்.

எஞ்சின்
இந்த காரில் 3 சிலிண்டர் கொண்ட 1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 66 எச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் டீசல் மாடலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மைலேஜ்
எஞ்சின், மைலேஜ் உள்ளிட்டவை வேகன் ஆர் 2013 மாடலுக்கும், ஸ்டிங்ரேவுக்கும் வித்தியாசமில்லை. இந்த கார் சோதனை நிலைகளில் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

முகப்பு
பிரதிபலிப்பு பட்டையுடன் வடிவமைக்கப்பட்ட கிரில், பெரிய அளவிலான ஏர்டேம், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சதுர வடிவ பானட். பனி விளக்குகள் என பல அம்சங்கள் கவர்ச்சியை தருகின்றன.

பின்புறம்
பின்புற டெயில் லைட் கிளஸ்ட்டர் குரோம் பூச்சு பூசப்பட்டு மிளிர்கிறது. அதேவேளை, ஜப்பானில் வித்தியாசமான பின்புற டிசைனில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் ஸ்டிங்ரே தற்போதையே வேகன் ஆரைவிட அதிக வித்தியாசங்கள் இல்லை.

இன்டிரியர்
கியர் லிவர், ஏசி வென்ட்டுகள், டோர் ஹேண்டில்கள் குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், ஆப்ஷனல் பேக்கேஜில் மட்டுமே கிடைக்கும். இருக்கை, டேஷ்போர்டு என அனைத்தும் கருப்பு நிறத்திலான இன்டிரியரும் விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் பேக்கேஜில் தேர்வு செய்யலாம்.

இன்ஃபர்மேஷன் கிளஸ்ட்டர்
நீல வண்ண பின்னணியுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம், தற்போதைய மைலேஜ் அளவு உள்ளிட்டவற்றை பெறலாம். எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டில் பவர் விண்டோஸ் கொடுக்கப்படாதது குறையாக உள்ளது. ஆக்ஸ் மற்றும் யுஎஸ்பி வசதி கொண்ட மியூசிக் சிஸ்டமும் உண்டு.

பாதுகாப்பு
டிரைவர் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் ஆப்ஷனலாக கிடைக்கும். விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் ரியர் வைப்பர், டீஃபாகர், பாதுகாப்பு வசதிகள் நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

வண்ணங்கள்
மிட்நைட் புளூ, பேஷன் ரெட், கிளிஸ்டரிங் கிரே, சூப்பீரியர் ஒயிட், சில்க்கி சில்வர் உள்ளிட்ட 5 வண்ணங்களில் கிடைக்கும்.

பின் இருக்கை
பின் இருக்கையை 60க்கு 40 என்ற விகிதத்தில் மடக்கிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

அலாய் வீல்
விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் மட்டும் கன் மெட்டல் பூச்சு கொண்ட அலாய் வீல்கள் கிடைக்கும். கருப்பு நிற பி பில்லர், சைடு ஸ்கர்ட் போன்ற சிறிய சிறிய விஷயங்கள் ஆகியவை வேகன் ஆரிலிருந்து இதனை வேறுபடுத்துகிறது.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை
எல்எக்ஸ்ஐ வேரியண்ட்: ரூ.4.09 லட்சம்
விஎக்ஸ்ஐ வேரியண்ட்: ரூ.4.38 லட்சம்
விஎக்ஸ்ஐ ஆப்ஷனல்: ரூ.4.67 லட்சம்


Click it and Unblock the Notifications








