இந்தியாவில் பென்ஸ் இ கிளாஸ் காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்
மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் காரின் புதிய டீசல் வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் பென்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக இ கிளாஸ் விளங்குகிறது.
இதுவரை 25,000க்கும் அதிகமான கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சாய்ஸ் இருக்கும் வகையில் இ கிளாஸ் காரின் புதிய இ350 சிடிஐ என்ற டீசல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதர மாடல்கள்
தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இ-350 மாடலை தவிர்த்தது இ200 சிஜிஐ, இ250 சிடிஐ மற்றும் இ63 ஏஎம்ஜி ஆகிய மாடல்களில் இ கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

எஞ்சின்
புதிய இ-350 சிடிஐ மாடலில் 262 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் வி6 பை- டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் 7ஜி ட்ரோனிக் ப்ளஸ் கியர் பாக்ஸ் உள்ளது. 0- 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சமாக 250 கிமீ வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்
ஸ்டீயரிங் அசிஸ்ட் வசதியுடன் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆக்டிவ் லேன் அசிஸ்ட், கிராஸ் டிராஃபிக் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற பல நவீன பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகளை பெற்றுள்ளது.

இதர அம்சங்கள்
ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப்(இ கிளாஸ் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் சன்ரூஃப் கொண்டதாக கிடைக்கிறது) ஆகியவையும் சிறப்பு சேர்க்கிறது. இ்ந்த காரில் 360 டிகிரி கேமராவும் உள்ளது.

விலை
புதிய பென்ஸ் இ350 சிடிஐ மாடல் ரூ.57.42 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலும் புனேயிலுள்ள பென்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








