புதிய பென்ஸ் காம்பேக்ட் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு வந்தது- விபரம்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்ஏ கிளாஸ் காம்பேக்ட் எஸ்யூவி சற்றுமுன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு துவங்கப்பட்டு 18 நாட்களில் இதுவரை 600 ஜிஎல்ஏ காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆடி க்யூ3 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 போன்ற போட்டியாளர்களைவிட குறைவான விலையில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, போட்டியாளர்களைவிட கூடுதல் விலையில் வந்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

மாடல்கள்
தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் பென்ஸ் ஏ கிளாஸ் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கிராஸ்ஓவர் மாடல் இது. இந்தியாவில் ஜிஎல்ஏ200 என்ற பெட்ரோல் மாடலிலும், ஜிஎல்ஏ200 சிடிஐ என்ற டீசல் மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவிற்கான பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் கிரவுண்ட் கிளிரயன்ஸ் 183 மிமீ கொண்டதாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்
பெட்ரோல் மாடலில் 174 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 134 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டு மாடல்களும் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும்.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.8 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் 17.9 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் 0- 100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளிலும், டீசல் மாடல் 9.9 வினாடிகளில் எட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்
பை- ஸினான் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட், பார்க்கிங் சென்சார்கள், ரியர் கேமரா அசிஸ்ட், 7 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது. நேவிகேஷன் சிஸ்டம், டியூவல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், கார்டன் ஆடியோ சிஸ்டம், ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் போன்றவை உள்ளன.

விலை
பென்ஸ் ஜிஎல்ஏ 200 சிடிஐ டீசல் மாடல் ரூ.32.75 லட்சம் என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதுதவிர, ஜிஎல்ஏ ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் ரூ.36 லட்சம் விலையிலும், 200சிடிஐ ஸ்போர்ட் டீசல் மாடல் ரூ.36.9 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். இது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட இருப்பதால், போட்டியாளர்களைவிட கூடுதல் விலை கொண்டதாக வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








