இண்டிகா இவி2 டீசல் காரின் விலை ரூ.45,000 குறைப்பு: சிறப்பு கடன் திட்டமும் அறிமுகம்
இண்டிகா இவி2 டீசல் காருக்கு அதிரடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. மேலும், மாருதி வேகன்-ஆர் காருடன் ஒப்பிட்டு, அதைவிட அனைத்து விதத்திலும் சிறந்த கார் இண்டிகா இவி2 என விளம்பரம் செய்துள்ளது.
கார் வாங்குவதற்கு சலுகைகளை பெறுவதற்காக புத்தாண்டையோ அல்லது தீபாவளியையோ எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கார் விற்பனை சரிவு கண்டிருப்பதால் ஒட்டுமொத்த கார் தயாரிப்பாளர்களும் இப்போது சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக, கவர்ச்சிகரமான கடன் திட்டங்களை அறிவித்து வருகின்றனர். நிசான், ஸ்கோடா, டாடா என முன்னணி நிறுவனங்கள் எளிய கடன் திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், இண்டிகா இவி2 டீசல் காரின் விலையை ரூ.45,000 வரை அதிரடியாக குறைத்திருக்கிறது டாடா.
ரூ.4.58 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இண்டிகா இவி2வின் விலை தற்போது ரூ.4.13 லட்சமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ரூ.6,542 என்ற மிகக்குறைந்த மாதத் தவணையில் இண்டிகா இவி2 காரை வாங்கும் புதிய கடன் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, மாருதி வேகன்-ஆர் காருடன் இண்டிகா இவி2 டீசல் காரை ஒப்பிட்டு சாதகமான அம்சங்களை குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளது. படத்தில் அந்த ஒப்பீட்டு அம்சங்களை காணலாம்.


Click it and Unblock the Notifications