ஆர்ஜேடி தலைவர்கள் மூவரின் உயிரை பறித்த கோர விபத்து...காரணம் என்ன? அப்பளமாக நொறுங்கியது ஸ்கார்பியோ
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் திருணத்தில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த ஆர்ஜேடி தலைவர்கள் மூவர் மற்றும் டிரைவர் என 4 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் திருணத்தில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த ஆர்ஜேடி தலைவர்கள் மூவர் மற்றும் டிரைவர் என 4 பேர் விபத்தில் உயிரிழந்தனர். ஸ்கார்பியோ கார் அப்பளம் போல் நொறுங்கி போன இந்த கோர விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. இது போன்ற விபத்துக்களை தவிர்க்க என்ன செய்யலாம்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லாலு மகன் திருமணம்
ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ். பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சரான லாலு பிரசாத் யாதவ், மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப்-ஐஸ்வர்யா ராய் திருமணம், பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில், பீகார் மாநிலத்தின் தற்போதைய முதல் அமைச்சர் நிதிஷ் குமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர். லாலு பிரசாத் யாதவ்வோ, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் பரோல் பெற்று அவரும் திருமணத்தில் பங்கேற்றார்.

தேஜ் பிரதாப்பின் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த 4 பேர் விபத்தில் உயிரிழந்த சோக சம்பவமும் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர்கள் ஆவார்கள். மற்றொருவர் டிரைவர்.

தூக்க கலக்கத்தில் அதிவேகம்
உயிரிழந்த 4 பேரும் வெள்ளை நிற மகேந்திரா ஸ்கார்பியோ காரில், பாட்னா-கிஸன்காஞ்ஜி சாலையில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அராரிரா மாவட்ட எல்லையில், மிக அதிக வேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் அதே வேகத்தில் சென்று டிவைடர் மீது மோதியது. இதனால் அடுத்த லேனுக்கு ஸ்கார்பியோ கார் தூக்கி வீசப்பட்டது. அப்போது அந்த லேனின் எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்த டிரக்கும், ஸ்கார்பியோ காரும் மோதி கொண்டன.

இந்த கோர விபத்தில்தான் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் 3 தலைவர்களும், டிரைவர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மிக வலுவான காராக கருதப்படும் ஸ்கார்பியோவே, இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கி விட்டது. அந்த காரின் எஞ்சிய பகுதியின் புகைப்படங்கள், விபத்தின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகின்றன.

விபத்துக்குள்ளான ஸ்கார்பியோ கார், நள்ளிரவில்தான் பாட்னாவில் இருந்து புறப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் விபத்து நடைபெற்றுள்ளது. இதனால் சோர்வு காரணமாக டிரைவருக்கு தூக்கம் வந்திருக்கலாம் என்றும், அந்த நேரத்தில் அதிவேகத்தில் சென்றதால், கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எப்படி தவிர்க்கலாம்?
தூக்க கலக்கம் காரணமாக விபத்து நடைபெறுவது என்பது தற்போது பொதுவான ஒரு விஷயமாகி விட்டது. ஆனால் அதன் விளைவுகள் மிக கொடூரமாக உள்ளன. இரவு நேர பயணத்தில் உங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான டிப்ஸ்களை இனி காணலாம்.

ஏசிக்கு பதிலாக விண்டோவை சற்று இறக்கி விட்ட நிலையில் பயன்படுத்தலாம். இதன்மூலம் ப்ரெஷ்ஷான காற்று கிடைப்பதுடன், வெளியில் கேட்கும் ஹாரன் சப்தங்களை நன்றாக உள் வாங்கி கொண்டு கவனமாக செயல்பட முடியும். அத்துடன் புழுதி பறந்தால், அடுத்து மோசமான சாலை வரவுள்ளதை புரிந்து கொண்டு, வாகனத்தின் வேகத்தை உடனடியாக குறைத்து விட முடியும்.

முன்பக்க கண்ணாடி மற்றும் விண்டோ கண்ணாடிகள் தெளிவாக இருக்க வேண்டும். இதனை அவ்வப்போது உறுதிபடுத்தி கொள்வது சிறந்தது.

பயணம் செய்ய உள்ள பாதை குறித்து கூடுமானவரை முன்கூட்டியே நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். சாலையை மனதில் நன்றாக பதிய வைத்து கொண்டு வாகனம் ஓட்டுவதால் இரவு நேர விபத்தை தவிர்க்கலாம்.

எக்காரணத்தை முன்னிட்டும் அதிவேகத்தில் செல்ல வேண்டாம். இந்திய நெடுஞ்சாலைகளில், அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிவேகத்தில் செல்வது என்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் திடீரென குறுக்கே வரக்கூடும். அப்போது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது.

வாகனத்தை இயக்கி கொண்டிருக்கும்போது, சோர்வாக இல்லாமல் சுறுசுறுப்புடன் இருப்பதையும், சாலைகளில் முழுவதுமாக கவனம் செலுத்துவதையும் டிரைவர் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

வாகனத்தை இயக்க தொடங்கும் முன்பாக போதுமான அளவு தூங்கி விடுவது நல்லது. ஏனெனில் டிரைவரின் அரை தூக்கம் பெரும் விபத்துக்கு காரணமாகி விடும்.

சோர்வாக அல்லது தூக்கம் வருவதை போன்று உணர்ந்தால், பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு சற்று நேரம் ஓய்வு எடுங்கள். சிறிது நேரம் தூங்குவதன் மூலமாக மிகுந்த எச்சரிக்கை உணர்வை கொண்டு வர முடியும்.

காபி அல்லது எனர்ஜி டிரிங்ஸ் பருகலாம். இதனால் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், கவனமாக செயல்பட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








