பைக் ஓட்டும்போது முதுகு வலி வராமல் இருக்க என்ன செய்யணும் தெரியுமா? இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!
பைக் ஓட்டும்போது முதுகு வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக் ஓட்டுவது என்பது உற்சாகமான அனுபவம்தான். ஆனால் முதுகு வலி என்ற மிகப்பெரிய பிரச்னையும் இதில் உள்ளது. தினமும் நீண்ட தூரம் பைக் ஓட்டக்கூடிய பலர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காகதான் இந்த செய்தி. பைக் ஓட்டும்போது முதுகு வலி ஏற்படாமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய மிக எளிமையான வழிமுறைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ரைடிங் பொஷிஷன்
பைக் ஓட்டும்போது கடுமையான முதுகு வலி ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் பைக்கில் எப்படி அமர்கிறீர்கள்? என்பதில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதாவது ரைடிங் பொஷிஷன் நன்றாக இருப்பது அவசியம். அத்துடன் உங்கள் முதுகை பாதுகாப்பதற்கு ஒரு சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்வதும் மிகவும் முக்கியம்.

உங்கள் பைக்கின் சீட் பொஷிஷன் மற்றும் ஃபுட்ரெஸ்ட் ஆகியவை அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக இருந்தால், அவற்றை உங்களுக்கு ஏற்ற வகையில் அட்ஜெஸ்ட் செய்யுங்கள். இதை செய்தால், ஹேண்டில்பார்களை பிடிப்பதற்கோ அல்லது தரையில் காலை ஊன்றுவதற்கோ நீங்கள் உங்கள் உடலை சிரமப்படுத்த வேண்டியதிருக்காது.

நீங்கள் புதிய பைக்கை வாங்குகிறீர்கள் என்றால், மிகவும் குனிய வேண்டிய அவசியம் இல்லாத ஒன்றை தேர்வு செய்யுங்கள். அதாவது ஹேண்டில்பார்களை பிடிப்பதற்கு, அதிகமாக வளைந்து கொடுக்க வேண்டிய அவசியம் இருக்க கூடாது. அதேபோல் பைக்கில் உட்காரும்போது எப்போதும் முதுகை நேராக வைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஸ்ட்ரெச்சிங்
பைக் ஓட்டும்போது முதுகு வலியை குறைப்பதற்கு நாங்கள் உங்களுக்கு கூறும் மற்றொரு டிப்ஸ் ஸ்ட்ரெச்சிங் (Stretching). முதுகு வலியிடம் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டுமென்றால், தசைகளை தளர்வாக வைத்து கொள்வது நல்லது. பைக்கை ஓட்ட தொடங்குவதற்கு முன் நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்யலாம். மேலும் பைக் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, இடைவெளி எடுத்து கொண்டும் ஸ்ட்ரெச்சிங் செய்யலாம்.

பயணம் முடிவடைந்த பின்னரும் கூட நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்வது நன்மை பயக்கும். எனவே ஒரு சில ஸ்ட்ரெச்சிங் வழிமுறைகளை தெரிந்து வைத்து கொள்வது சிறந்தது. உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ, அதை தெரிந்து வைத்து கொண்டு பின்பற்றலாம். முதுகு வலி நீங்குவதற்கு மிகவும் எளிமையான ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சிகள் நிறைய இருக்கின்றன.

பைக் கண்டிஷன்
மோசமான சஸ்பென்ஸனுடன் மோசமான கண்டிஷனில் உள்ள டூவீலர், நிலைமையை இன்னும் மோசமாக்கும். குண்டும், குழியுமான சாலைகளில் ஓட்டும்போது உடல் குலுங்குவதால் பாதிப்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முதுகு வலி ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், உங்கள் பைக் நல்ல கண்டிஷனில் இருப்பதும் அவசியம். சீரான இடைவெளிகளில் பைக்கை சர்வீஸ் செய்யுங்கள்.

சீட் பேடு
தொலைதூர பயணங்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்குமே இருக்கும். இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் பைக்கிற்கு சீட் பேடு (Seat Pad) வாங்குவது குறித்து யோசனை செய்யலாம். உங்களுடைய தொலைதூர பைக் பயணத்தை இன்னும் சௌகரியமானதாக மாற்றக்கூடிய திறன் இதற்கு உண்டு.

அசௌகரியமான இருக்கைகள் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ளுங்கள். முதலில் பயணம் சிறப்பாக இருக்காது. அடுத்து கவனச்சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பயணத்தின்போது கவனச்சிதறல் ஏற்படுவது மிகவும் ஆபத்தானது. இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கலாம். எனவே நீங்கள் அமரும் இருக்கை சௌகரியமாக இருப்பது முக்கியம்.

வலி நிவாரணி
தொலைதூர பயணங்களின்போது முதுகு வலி ஏற்படக்கூடிய பிரச்னை உங்களுக்கு இருந்தால், பெயின் ரீலீஃப் ஜெல் (Pain Relief Gel), பெயின் ரிலீஃப் ஸ்பிரே (Pain Relief Spray) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். இவை முதுகு வலியில் இருந்து உங்களுக்கு நிவாரணம் தரும். எனவே இதில் ஏதாவது ஒன்றை எப்போதும் பைக்கில் வைத்திருங்கள்.


Click it and Unblock the Notifications








