இந்த பொருட்கள் இல்லாமல் உங்களது காரை மழையில் கொண்டு போகாதீங்க - கம்மியான விலையில் எல்லாத்தையும் வாங்கிவிடலாம்!
இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் மழைக்காலம் துவங்கிவிட்டது. தமிழ்நாட்டிலும் நிறைய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டது. மழைக்காலம் துவங்கிவிட்டாலே ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு பிரச்சனை துவங்கிவிட்டது என்று அர்த்தம். மழைநீர் தேங்கிய சாலைகளுக்கு வாகனத்தை கொண்டு செல்ல வேண்டாம் என்பது போன்ற சில வழிமுறைகளை இனி பின்பற்ற வேண்டியிருக்கும். அதேநேரம் உங்களது காரில் குறைந்தப்பட்சம் இந்த 7 அம்சங்கள் ஆவது கட்டாயம் இருக்க வேண்டும். அந்த 7 அம்சங்கள் என்னென்ன? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நீர் தடுப்பு படலம்: மழைக்காலத்தில் கட்டாயம் உங்களது காரில் இருக்க வேண்டிய ஒன்று. காரில் செல்லும்போது மழைநீர் உங்களது காரின் விண்ட்ஷீல்டில் படுவதினால் உங்களால் சாலையை தெளிவாக காண முடியாது. இதை தடுக்க தான் வைபர் உள்ளதே என நீங்கள் கேட்கலாம். வைபர்கள் மழைநீரை அகற்றுவதை மட்டுமே செய்யுமே தவிர்த்து, மழைநீரால் ஏற்படும் மங்கலான பார்வையை தடுக்காது. இதற்காகவே மெழுகு படலங்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

ரப்பர் ஃப்ளோர் மேட்: மழைக்காலத்தில் எப்படியிருந்தாலும் காருக்குள் சிறிதளவாவது மழைநீர் புகுந்துவிடும். உங்களது செருப்பு/ ஷூ அல்லது நீங்கள் கொண்டுவரும் குடை & பைகளினால் காருக்குள் மழைநீர் நுழையலாம். ஆதலால், முன்னெச்சரிக்கையாக ரப்பர் ஃப்ளோர் மேட்டை காருக்குள் பயன்படுத்துவது சிறந்தது. இந்த மேட் ரப்பரினால் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், அப்போதுதான் அதனை சுத்தம் செய்வது எளியதாக இருக்கும்.
ORVM ஆண்டி-ஃபாக் படலம்: மழைக்காலத்திலும் காலை நேரங்களில் பனி உருவாகுவதை பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, மழைநீர் தெறிப்பதினாலும் பின்புறத்தை காட்டும் உங்களது காரின் வெளிப்பக்க கண்ணாடிகளில் வெள்ளை நிறத்தில் பனி உருவாகக்கூடும். இது உங்களது பார்வையை மறைக்கும் என்பதால், இதை தடுப்பதற்கென மார்க்கெட்டில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ஆண்டி-ஃபாக் படலத்தை வாங்கி பயன்படுத்தலாம்.

மெழுகு பெயிண்ட் படலம்: மழைக்காலம் என்றாலே சாலைகள் ஈரமாக இருக்கும் மற்றும் சாலைக்கு இரு பக்கங்களிலும் சேறு, சகதியுமாய் இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம். ஆதலால், சேறு சகதிகள் உங்களது காரின் மீது படுவது தவிர்க்க முடியாத ஒன்றே. சேறு, சகதி பட்டாலும் எளிதில் அதனை கழுவி காரை சுத்தம் செய்வதற்கு ஏதுவாக காரின் பெயிண்ட்டின் மீது மெழுகு படலத்தை கொடுக்கலாம். மேலும், இது உராய்வுகள் மற்றும் கீறல்களில் இருந்தும் காரை பாதுக்காக்கும்.
மைக்ரோஃபைபர் துணி: மழைக்காலத்தில் எப்போதும் உங்களது காருக்குள் சிறு சிறு துணிகள் இருப்பது நல்லது. ஏனெனில், நீங்கள் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் மழைநீர் உங்களது காருக்குள் வந்துவிடும். மழைநீர் காருக்குள் ஸ்டேரிங் சக்கரம், கியர் லிவர் மற்றும் டேஸ்போர்டில் இருந்தால் அதனை துடைப்பதற்கு துணி தேவை. அவை மைக்ரோ ஃபைபர் துணிகளாக இருந்தால் இன்னும் சிறந்தது.

வாட்டர்ஃப்ரூஃப் கார் கவர்: மழைநீர் உள்ளே புகாதவாறே கார்கள் வடிவமைக்கப்படுகின்றன. இருப்பினும், தூசி, சேறு, சகதிகளில் இருந்து காரை பாதுகாக்க வாட்டர்ஃப்ரூஃப் கவரை கொண்டு காரை முழுவதும் மூடுவது நிறைய நன்மைகளை தரும். மழைநீரால் காரின் வெளிப்புறங்களில் ஏற்படும் துருப்பிடித்தல்களையும் கார் கவர் தடுக்கும். உங்களது காரின் மாடலுக்கு ஏற்ற கவரை வாங்கி மூடுவது சிறந்தது.
அவசரகால உபகரணங்கள்: மழைக்காலத்தில் எது எப்போது நடக்கும் என்றே சொல்ல முடியாது. ஆதலால், ரெயின்கோட், குடை, ஒளியை எதிரொலிக்கக்கூடிய வார்னிங் முக்கோணங்கள் மற்றும் ஜம்ப் ஸ்டார்டர் உள்ளிட்டவை அடங்கிய அவசரகால உபகரணங்களை எப்போதும் காரில் வைத்திருப்பது நல்லது. இவை அனைத்தையும் ஒரு பையில் போட்டு காரில் வைத்திருக்கவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழைக்காலத்தில் காரில் இருக்க வேண்டியவை இன்னும் ஏராளமானவை உள்ளன. அவற்றுள் முக்கியமான மற்றும் அத்தியாவசியமான சிலவற்றை மட்டும்தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இவை தவிர்த்து, வேறு என்னென்ன விஷயங்கள் மழைக்காலத்தின்போது காரில் இருக்க வேண்டும் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









