ஒரு சிலர் மழைக்காலமா பாத்து யூஸ்டு கார் வாங்குவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா!
புதிய கார்களை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு நாம் அதிகமாக மெனக்கெட வேண்டியதிருக்கும். நிலைமை இப்படி இருக்கும்போது, யூஸ்டு கார்களை வாங்குவது என்பது இன்னும் சிரமமான காரியம். நாம் சற்று அசந்தால் கூட, மோசமான காரை நம் தலையில் கட்டி விடுவார்கள்.
இருப்பினும், சரியான ஆராய்ச்சி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், உங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற நம்பகமான யூஸ்டு காரை உங்களால் வாங்க முடியும். அது எப்படி? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். யூஸ்டு கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த டிப்ஸ்கள் நிச்சயமாக உதவி செய்யும்.

மின் கூறுகளை சரிபார்க்கவும்: நீங்கள் வாங்கவுள்ள யூஸ்டு காரின், அனைத்து மின் கூறுகளும் வேலை செய்யும் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும். ஹெட்லைட்கள், டெயில்லைட்கள், இண்டிகேட்டர்கள், வைப்பர்கள் மற்றும் டிஃபோகர்கள் சரியாகச் செயல்படுகிறதா? என்பதை சோதிக்கவும். பழுதடைந்த மின் கூறுகளை சரி செய்ய அதிகமாக செலவாகும் என்பதால், மிக கவனமாக இருங்கள்.
டயர்கள் மற்றும் சஸ்பென்ஷனை ஆய்வு செய்யவும்: ஈரமான சாலைகள், காரின் செயல்திறனை பாதிக்கும் என்பதால், டயர்கள் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பில் கவனம் செலுத்துங்கள். டயர்களில் த்ரெட்கள் சரியாக இருக்கிறதா? வீக்கம் உள்ளதா எனப் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். அத்துடன் சஸ்பென்ஷன் உறுதியாக இருக்கிறதா? என்பதையும் பார்க்கவும்.

துருப்பிடித்துள்ளதா? என்பதை பரிசோதிக்கவும்: அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, கார்கள் அதிகமாக துருப்பிடிக்கும். குறிப்பாக யூஸ்டு கார்கள் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டது என்பதால், துரு பிரச்னை மிகவும் அதிகமாக இருக்கலாம். எனவே துரு அல்லது அரிப்பின் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா? என்பதை பாருங்கள்.
குறிப்பாக காரின் அடிப்பகுதியை ஆய்வு செய்யுங்கள். காரின் அடிப்பகுதியில் துரு அல்லது அரிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், அது கட்டமைப்பு ஒருமைப்பாட்டை வெகுவாக பலவீனப்படுத்தி விடும். எனவே துரு மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சோதனை செய்யுங்கள்.
ஈரமான சாலைகளில் ஓட்டி பார்க்கவும்: யூஸ்டு கார்களின் கையாளுமை மற்றும் பிரேக்கிங் திறன்களை மதிப்பிடுவதற்கு, ஈரமான சாலைகளில் சோதனை ஓட்டம் செய்து பார்ப்பது சிறந்தது. யூஸ்டு காரின் கையாளுமை மற்றும் பிரேக்கிங் திறன்களில் பிரச்னை இருந்தால், இது உங்களுக்கு தெரியப்படுத்தி விடும்.
சர்வீஸ் ஹிஸ்டரியை சரிபார்க்கவும்: நீங்கள் வாங்கவுள்ள யூஸ்டு கார் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பதை சர்வீஸ் ஹிஸ்டரி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம், கார் எப்படி பராமரிக்கப்பட்டுள்ளது? கடந்த காலங்களில் ஏதேனும் பெரிய ரிப்பேர் செய்யப்பட்டுள்ளதா? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
மெக்கானிக் உதவியை நாடுங்கள்: யூஸ்டு காரை வாங்குவதற்கு முன், நம்பிக்கையான மெக்கானிக்கின் உதவியை நாடுங்கள். உங்கள் சுயமாக செய்யும் பரிசோதனையின்போது ஒரு சில பிரச்னைகள் வெளிப்படையாக தெரியாமல் போகலாம். அவசர அவசரமாக உங்கள் தலையில் கட்ட, அதன் முந்தைய உரிமையாளர் ஒரு சில பிரச்னைகளை மறைத்து விடலாம்.
இந்த பிரச்னைகளை எல்லாம் உங்களுக்கு நம்பிக்கையான மற்றும் அனுபவம் வாய்ந்த மெக்கானிக் மிக எளிதாக கண்டுபிடித்து விடுவார். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பிரச்னைகள் ஏற்படுவதை தடுப்பதுடன், உங்களுக்கு மன அமைதியையும் வழங்குகிறது. எனவே கை தேர்ந்த மெக்கானிக்குகளின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். அத்துடன் யூஸ்டு கார்களை வாங்கும்போது பேரம் பேச தயங்க வேண்டாம். அதிலும் தற்போதைய பருவ மழைக்காலம், யூஸ்டு கார்களை வாங்குவதற்கு மிகவும் சரியான நேரம். ஏனெனில் மழைக்காலத்தில், யூஸ்டு கார்களுக்கான தேவை மிகவும் குறைவாக இருக்கும்.
எனவே தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய ஆர்வமாக உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து, பெரிய அளவிலான விலை குறைப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம். குறைவான விலையில் கிடைக்கும் என்பதற்காகவே நிறைய பேர், மழைக்காலத்தில் யூஸ்டு கார்களை வாங்குகின்றனர். எனவே யூஸ்டு காரை வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருந்தால், மழைக்காலம் முடிவடைவதற்கு முன்பாக வாங்குவது, நீங்கள் ஓரளவிற்கு பணத்தை சேமிக்க உதவி செய்யலாம்.


Click it and Unblock the Notifications








