இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'

கார் அல்லது த்ரீ வீலரில் செல்வதைவிட இருசக்கர வாகனங்களில் செல்வது அதிக ரிஸ்க் இருப்பது கண்கூடு. அதுவும் தற்போது பெருகி வரும் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் எந்த வாகனம் ஓட்டினாலும் ஆபத்து அதிகம் இருக்கிறது.
ஆனால்,விபத்து என்றால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்குத்தான் உடலில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக ஏற்கனவே பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நம் நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் அணிந்து செல்லும் பெரும்பான்மையான ஹெல்மெட்டுகள் போலியானவை என தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் சிக்கும்போது இதுபோன்ற ஹெல்மெட்டுகள் உயிரை காவந்து செய்வதற்கு பதில் காவு வாங்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் நிலை இருக்கிறது.
டெல்லியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஸ்டீல் பேர்டு ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் கூறுகையில், நாட்டில் 100 நிறுவனங்கள் மட்டுமே ஐஎஸ்ஐ தர அங்கீகாரத்துடன் ஹெல்மெட் தயாரிக்கின்றன.
ஆனால், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் எந்தவொரு தர நிலையையும் கடைபிடிக்காமல் போலி ஹெல்மெட்டுகளை தயாரித்து விற்று வருகின்றன. இது மிகவும் அபத்தமானதோடு, வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்தானவை என்று கூறினார்.
நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 13 மில்லியன் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதற்கு தக்கவாறு ஹெல்மெட் விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனவே, இதில் அலட்சியம் காட்டாமல் சற்று கூடுதல் விலையாக இருந்தாலும் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளையே வாங்கி அணிய வேண்டும்.
சாலை ஓரங்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் போலி ஹெல்மெட்டுகளின் விற்பனையையும் ஒழிக்க அரசாங்கமும், போலீசாரும் தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இருப்பினும், நம்மை காத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு கூடுதலாக இருக்கிறதல்லவா?.
சில நூறு ரூபாய் கூடுதல் கொடுத்து ஹெல்மெட் வாங்க தயங்கினால் விலை மதிக்க முடியாத உயிரை விலையாக கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு தரமான ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளை வாங்குங்கள்.


Click it and Unblock the Notifications








