பெட்ரோல் காரில் ஏசி போட்டா மைலேஜ் குறைவது போல இவி காரிலும் ரேஞ்ச் குறையுமா?
வாகனங்களில் ஏசி பயன்படுத்தினால் மைலேஜ் குறையும் என்பது பெட்ரோல், டீசல் வாகனங்களில் நமக்கு தெரிந்த விஷயமாக இருக்கிறது. ஆனால் தற்போது இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகமாகி வரும் நிலையில், வாகனங்களிலும் ஏசி பயன்படுத்தினால் ரேஞ்ச் குறையுமா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று இந்தியாவில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகனங்களில் ஏசி பயன்படுத்தி வாகனம் ஓட்டும்போது ஏசி பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டினால் எவ்வளவு மைலேஜ் கிடைக்குமோ அதை விட குறைவான மைலேஜ் தான் கிடைக்கும். இதற்கு முக்கியமான காரணம் ஏசியில் இயங்கும் மோட்டார் இன்ஜினியரிங் உந்து சக்தியால் இயங்குகிறது. இதனால் இன்ஜினில் ஏற்படும் பவர் ஏசிக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதன் காரணமாக அதிக அளவிலான பெட்ரோலை செலவு செய்து இன்ஜின் இயக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதன் காரணமாக வாகனத்தின் மைலேஜ் குறைகிறது. அதேநேரம் ஏசி ஆன் செய்து ஓட்டும்போது வாகனத்தின் பவரும் குறைகிறது. இது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் வாகனம் ஓட்டும் அனைவரும் நாம் இந்த மைலேஜ் குறைவு பிரச்சனையை சந்திப்போம்.
இன்று எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை அதிகமாகி விட்டது. எலெக்ட்ரிக் வாகனங்கள் முழுமையாக பேட்டரி பவரில் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றன. இந்த வாகனங்களிலும் ஏசி பயன்படுத்தப்படுகிறது இந்த வாகனங்களில் ஏசி பயன்படுத்தும் போது வாகனத்தின் ரேஞ்ச் குறையுமா? பெட்ரோல் டீசல் அளவுக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பலர் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏசி அதிக அளவிலான மின்சக்தியை குடிக்கும் என கூறி வருகிறார்கள்.

இதை சோதனை செய்ய சிலர் சமீபத்தில் அறிமுகமான டாடா கர்வ் மற்றும் டாடா நெக்ஸான் இவி ஆகிய கார்களில் இதை சோதனை செய்தது. இதற்காக டாடா கர்வ் இவியில் 55 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட காரையும் டாடா நெக்ஸான் இவியில் 40.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட காரையும் சோதனைக்கு உட்படுத்தியது.
இந்த சோதனையின் போது டாடா கர்வ் இவி காரில் 61% பேட்டரி சார்ஜ் இருந்துள்ளது. 75 சதவீத பேட்டரி சார்ஜ் இருந்துள்ளது. இந்த சோதனையில் காருக்குள்ளே அனைத்து ஜன்னல்களையும் அடைத்து பயணிகள் அமர்ந்து கொண்டு காரை இயக்காமல் வெறும் ஏசியை மட்டும் 30 நிமிடங்கள் இயக்கியுள்ளார்கள்.

இப்படியாக அவர்கள் ஏசியை இயக்கும் போது டெம்பரேச்சரை 24 டிகிரிக்கும் பேன் ஸ்பீடை லெவல் இரண்டிலும் வைத்து இயக்கியுள்ளார்கள். சுமார் 30 நிமிடம் கழித்து எவ்வளவு சார்ஜ் குறைந்துள்ளது? வாகனத்தில் காட்டப்படும் ரேஞ்ச் எவ்வளவு குறைந்துள்ளது என்ற கணக்கீடு மூலம் எவ்வளவு பேட்டரி சார்ஜ் எவ்வளவு செலவாகிறது என்பதை கணக்கிட முடிவு செய்தார்கள்.
சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு கிடைத்த முடிவுகள் பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தன. இந்த இரண்டு காரிலும் 30 நிமிடங்கள் ஏசி பயன்படுத்திய பிறகு ஒரு சதவீத பேட்டரி சார்ஜ் மட்டுமே குறைந்துள்ளது. அதாவது கர்வ் காரில் 61% பேட்டரியில் இருந்து 60 சதவீதமாக அது குறைந்துள்ளது. அதே போல நெக்ஸான் இவி காரில் 75% பேட்டரியில் இருந்து 74 சதவீதமாக இது குறைந்துள்ளது.
ரேஞ்ச் குறித்த விபரங்களை பார்க்கும்போது நெக்ஸான் இவி காரில் ஏசியை ஆன் செய்வதற்கு முன்பு காட்டிய ரேஞ்சை விட தற்போது மூன்று கிலோமீட்டர் குறைவான ரேஞ்ச் காட்டியுள்ளது. அதேபோல கர்வ் காரில் நான்கு கிலோமீட்டர் வரை ரேஞ்ச் குறைவாக காட்டியுள்ளது. அப்படி பார்க்கும்போது 30 நிமிடங்கள் தொடர்ந்து வாகனம் ஓட்டினால் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் ரேஞ்ச் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அப்படியானால் ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் வாகனம் ஓட்டும்போது ஆறு முதல் ஒன்பது கிலோமீட்டர் வரை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த ஒரு மணி நேர பயணத்தை நீங்கள் சராசரியாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறீர்கள் என வைத்துக்கொண்டால் 60 கிலோமீட்டருக்கு 9 கிலோமீட்டர் வரை ஏசி பயன்படுத்தி வாகனம் ஓட்டும்போது ரேஞ்ச் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரிய அளவில் ரேஞ்சை பாதிக்கவில்லை என சொல்லலாம். நீங்கள் ஏசி பயன்படுத்தாமல் ஜன்னல் கண்ணாடிகளை இறக்கிக் கொண்டு பயணம் செய்தால் சரியான ஏரோ டைனமிக்ஸ் இல்லாமல் வாகனம் அதற்காகவே குறிப்பிட்ட அளவு ரேஞ்ச் குறையும் அதை ஒப்பிடும்போது ஏசி போட்டு பயணிப்பது சிறப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









