இது தெரியாம சார்ஜ் பண்ணிட்டு இருக்கோமே... எலெக்ட்ரிக் வாகன பேட்டரி சூடாகுவதற்கு முக்கியமான காரணம்!
எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) லித்தியம்-இரும்பு பேட்டரிகளின் செயல்திறன் மற்றும் ஆயுளை நீட்டிக்க, முடிந்தவரையில் 80% வரை மட்டுமே சார்ஜ் (Charge) செய்வது ஒரு சிறந்த யுக்தி ஆகும். இதனை '80/20 விதி' என அழைக்கின்றனர். நீண்ட பயணங்களுக்கு மட்டுமே 100% சார்ஜ் தேவைப்படும் நிலையில், தினசரி பயணங்களுக்கு 80% சார்ஜ் லிமிட்டை பின்பற்றுவது மூன்று முக்கிய பலன்களை அளிக்கிறது.
பேட்டரியின் ஆயுளை கணிசமாக அதிகரிக்கும்: லித்தியம்-இரும்பு பேட்டரிகள் அடிக்கடி 100% சார்ஜ் செய்யும்போது அதிக உள் அழுத்தத்தையும் ரசாயனச் சிதைவையும் சந்திக்கின்றன. 20-80% சார்ஜ் செய்வதால் பேட்டரி வெப்பமடைவதும், விரைவாக தேய்மானம் அடைவதும் குறைந்து பேட்டரியின் ஆயுள் கூடும். அத்துடன், 100% சார்ஜில் பல எலெக்ட்ரிக் வாகனங்களில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் (regenerative braking system) முழுமையாக செயல்படாது.

அதாவது, பேட்டரியில் அதிக சார்ஜ் இருப்பதால் ரீஜெனரேட்டிவ் பிரேக் மூலம் கிடைக்கும் சார்ஜ் தேவைப்படாததால், இந்த பிரேக் சிஸ்டம் முழுமையாக செயல்படாது. அதுவே, 80% சார்ஜில் இது முழுமையாக செயல்பட்டு, வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும். ரீஜெனரேட்டிவ் பிரேக் சிஸ்டம் மூலமாக கணிசமான சார்ஜ் கிடைத்து அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய தேவை குறையும்.
இரண்டாவதாக, சார்ஜிங் நேரத்தையும் கணிசமாகச் சேமிக்கலாம்: எலெக்ட்ரிக் வாகனங்கள் சீராக சார்ஜ் ஆவதில்லை. அவற்றின் 'சார்ஜிங் வளைவு' (charging curve) காரணமாக, முதல் 80% சார்ஜ் ஆனது இறுதி 20%-ஐ விட வேகமாக நடக்கும். பெரும்பாலும், ஒரு டிசி ஃபாஸ்ட் (DC Fast) சார்ஜரில், 80% முதல் 100% வரை சார்ஜ் செய்ய ஆகும் நேரம் ஆனது அதே பேட்டரியை 10% முதல் 80% சார்ஜ் செய்ய ஆகும் நேரத்திற்கு சமம் ஆகும். இதனால் 80% சார்ஜ் உடன் முடித்துக்கொண்டு, விரைவாக பயணத்தைத் தொடங்கலாம்.

மூன்றாவதாக, இது பணத்தைச் சேமிக்கும் நடவடிக்கையாகும்: பேட்டரியின் தேய்மானத்தைக் குறைத்து, அதன் ஆயுளை நீட்டிப்பதன் மூலம், அதிக செலவில் பேட்டரியை மாற்றுவதைத் தவிர்க்கலாம். பொது சார்ஜிங் நிலையங்களில், 80% மேல் சார்ஜ் செய்வது திறனற்றது, மேலும் அதிக செலவை உண்டாக்கக் கூடியது. ஆரோக்கியமான பேட்டரி, எதிர்காலத்தில் வாகனத்திற்கு சிறந்த மறுவிற்பனை மதிப்பையும் பெற்றுத்தரும்.
பயன்பாட்டு குறிப்புகள்: பெரும்பாலான நவீன எலெக்ட்ரிக் வாகனங்களில், இன்போடெயின்மென்ட் சிஸ்டம் அல்லது ஸ்மார்ட்ஃபோன் செயலி (Smartphone App) மூலம் பேட்டரியின் அதிகபட்ச சார்ஜ் லிமிட்டை எளிதாக நிர்ணயிக்கலாம். இது, நிர்ணயிக்கும் சார்ஜ் அளவிற்கு மேல் பேட்டரி சார்ஜ் ஆகாத வண்ணம் எச்சரிக்கைகளை வெளியிடும். இதன் மூலமாக, பேட்டரியை எப்போதும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் சார்ஜ் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
லித்தியம் இரும்பு பாஸ்பேட் (LFP) பேட்டரிகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு விதிவிலக்கு உள்ளது. அதாவது, அவற்றின் பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS) சீராக வேலை செய்ய, வாரத்திற்கு ஒரு முறையாவது 100% சார்ஜ் செய்ய உற்பத்தி நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றன. இன்றைய காலத்தில் LFP பேட்டரிகள் தான் அதிகமாக எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படுவதால், இந்த விதிவிலக்கான நடைமுறையை பின்பற்றுவது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள சில குறைபாடுகளுள் ஒன்று, சார்ஜிங்கிற்காக காத்திருக்க வேண்டியது ஆகும். இதனாலேயே பெரும்பாலான இவி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பிக் கொள்கின்றனர். ஆனால், அவ்வாறு செய்வதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். அதேநேரம் கடைசியாக குறிப்பிட்ட, LFP பேட்டரிகளை வாரத்திற்கு ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்வதையும் மறக்காமல் பின்பற்றவும்.


Click it and Unblock the Notifications








