இதெல்லாம் தப்புன்னே தெரியாம பண்ணிட்டு இருப்பீங்க! இந்த மட்டும் சரி பண்ணா ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்
இப்போது நாம் செய்யும் சில தவறுகள் நேரடியாக பைக்கின் மைலேஜ் பாதிக்கிறது. இதனால் பலர் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறும் மைலேஜ் விட குறைவான மைலேஜ் தான் தங்களுக்கு கிடைக்கிறது என கூறி வருகிறார்கள். இப்படியாக நாம் பைக் ஓட்டும் போது என்னென்ன தவறுகள் எல்லாம் செய்கிறோம் அதை எப்படி சரி செய்து கொள்வது இதன் மூலம் மைலேஜ் எப்படி அதிகரிப்பது என்ற விரிவான விபரங்களை காணலாம் பாருங்க.
பைக் ஓட்டுவது என்பது ஒரு கலை என்றே சொல்லலாம். அது அவ்வளவு எளிதாக அனைவராலும் பயின்று விட முடியாது. காரை விட பைக் ஓட்டுவது என்பது சற்று சிரமமான விஷயம்தான். இப்படியாக பைக் ஓட்ட பழகி புதிதாக பைக் வாங்கிய பலர் கூறும் மிகப்பெரிய பிரச்சனை என்ன என்றால் பைக்கின் மைலேஜ் தான். தங்களுக்கு குறைவான மைலேஜ் தான் கிடைக்கிறது என புகார் அளித்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முறையாக பைக் ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் மைலேஜ் தான் தெரிவிக்கிறார்கள். நீங்கள் பைக் ஓட்டும்போது சின்ன சின்ன தவறுகள் செய்வது நேரடியாக பைக்கின் மைலேஜை பாதிக்கிறது. இப்படியாக பைக்கின் மைலேஜ் வெகுவாக குறைகிறது. இதனால் நீங்கள் கீழே வரும் சின்ன சின்ன தவறுகளை இனி பைக் ஓட்டும்போது செய்யாதீர்கள்
சரியான வேகத்தில் கியரை மாற்றுவது: உங்களுக்கு பைக்கின் மைலேஜ் மிக முக்கியம் என்றால் நீங்கள் பைக் ஓட்டும்போது சரியான வேகத்தில் கியரை மாற்ற வேண்டியது மிக முக்கியமான விஷயமாகும். நீங்கள் யாருமே இல்லாத ரோட்டில் பயணிக்கிறீர்கள் என்றால் பைக் தொடர்ந்து ஒரே வேகத்தில் செல்ல வேண்டுமென்றால் நீங்கள் டாப் கியரில் தான் செல்ல வேண்டும். அப்படி சென்றால் தான் அது இன்ஜினிற்கு அதிகமான பிரஷரை கொடுக்காது.

அதே நேரம் நீங்கள் பைக்கில் மெதுவாக செல்கிறீர்கள் என்றால் இரண்டு அல்லது மூன்றாவது கியரில் தான் பயணம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் தான் பைக் நடுவழியில் நிற்காமல் தொடர்ந்து உங்களால் ஸ்மூத்தான பயணத்தை செய்ய முடியும். டிராபிக்கில் உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தாமல் இருக்கும். கம்மியான வேகத்தில் செல்லும்போது அதிக கியரில் பயணம் செய்வது இன்ஜினை பாதிக்கும்.
பிரேக்கில் காலை வைத்துக் கொண்டே பயணம் செய்யாதீர்கள்: பலர் டூவீலரில் செல்லும்போது பிரேக் மீது கால் வைத்துக் கொண்டே பயணம் செய்வார்கள் என்னதான் அவர்கள் பிரேக்கை பிடிக்கவில்லை என்றாலும் அதன் மீது காலை லேசாக வைத்திருப்பார்கள். இது ஒரு வகையில் நல்ல விஷயம் தான்.

திடீரென எதுவும் குறுக்கே வந்தால் உடனடியாக உங்களால் பிரேக் பிடிக்க முடியும். ஆனால் நீங்கள் பிரேக் மீது எப்பொழுதும் காலை வைத்திருப்பது லேசான அழுத்தத்தை பிரேக்குக்கு தரும். அதில் லேசாக பிரேக்கை என்கேஜ் செய்து வைத்திருக்கும். சிறிய அழுத்தம் இருந்தால் பிரேக் பிடிக்கத்தானே செய்யும்?
இதனால் நீங்கள் இன்ஜினில் அதிகமான பவர் கொடுக்கும்போது அந்த முழு திறனும் வீலுற்கு செல்லாமல் பிரேக் அதன் திறனை குறைத்து விடும். இதனால் உங்கள் வாகனம் வேகமாக செல்ல முடியாது. இதனால் நீங்கள் அதிக பெட்ரோலை செலவு செய்து பயணம் செய்ய வேண்டிய தேவை இருக்கும். இது குறுகிய தூரத்திற்கு பெரிய அளவில் வித்தியாசத்தை தராவிட்டாலும் தொடர்ந்து இதே போன்ற பழக்கத்தில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொடுக்கும்.

டயரில் உள்ள காற்றழுத்தம்: பைக்கில் செல்லும் பலர் கவனிக்காமல் இருக்கும் விஷயம் டயரில் உள்ள காற்றின் அழுத்தம் தான். பொதுவாக பலர் பெட்ரோல் போடும் போது மட்டும் காற்றின் அழுத்தத்தை செக் செய்து கொள்வார்கள். சிலர் மாதத்திற்கு ஒரு முறை செக் செய்து கொள்வார்கள். சிலர் செக் செய்யாமலேயே விட்டுவிடுவார்கள். ஒரிரு நாட்களுக்கு ஒரு முறை செக் செய்து கொள்வது தான் நல்லது.
டயரின் பிரஷர் குறைந்தாலும் வாகனத்தின் மைலேஜ் என்பது குறையும். டயர் பிரஷர் குறைந்து விட்டால் என்னதான் இன்ஜின் வேகமாக கூட்டினாலும் டயரால் அதிக வேகத்தில் சுத்த முடியாது. இது தரையுடன் அதிகமான அழுத்தத்தை கொடுத்து கொண்டு இருக்கும். அதனால் டயரின் பிரஷரை செக் செய்வதும் மைலேஜ் அதிக கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டூவீலர் ஓட்டும் பலருக்கும் இப்படியான ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. பலரும் இன்னும் மேலே குறிப்பிட்டுள்ள சில தவறுகளை செய்து கொண்டே தான் வாகனம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நிச்சயம் இந்த மாதிரியான பழக்கத்தை எல்லாம் மாற்றினால் நிச்சயம் வாகனத்தின் மைலேஜ் கணிசமான அளவு அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









