பைக்கைவிட ஸ்கூட்டர் கம்மியாதான் மைலேஜ் கொடுக்கும் ஏன் தெரியுமா?
வாகனம் ஓட்டும்போது பலருக்கும் மைலேஜ் குறித்த கவலை இருக்கும். அதிக மைலேஜ் தரும் வாகனங்களால் தான் நம்மால் குறைந்த செலவில் பயணம் செய்ய முடியும். இப்படியாக ஒரே அளவு இன்ஜின் திறன் கொண்ட ஸ்கூட்டர் மற்றும் பைக் ஆகிய இரண்டு வாகனங்களை ஒப்பிடும்போது ஸ்கூட்டரில் குறைவான மைலேஜூம் பைக்கில் அதிகமான மைலேஜூம் கிடைக்கும் இதற்கு காரணம் என்ன விரிவாக காணலாம் வாருங்கள்.
வாகன ஓட்டிகள் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மைலேஜ் தான். இன்று பெட்ரோல் விற்கும் விலைவாசியில் அதிக மைலேஜ் தரும் வாகனங்களை பயன்படுத்தினால் மட்டுமே கட்டுப்படியாகும். முடிந்த அளவுக்கு அதிக மைலேஜ் தரும் வாகனமாக நமது வாகனத்தை வைத்திருக்க பல்வேறு டிப்ஸ்கள் இருக்கின்றன.

ஆனால் நீங்கள் என்னதான் முறையாக பயன்படுத்தினாலும் ஒரே இன்ஜின் திறன் கொண்ட பைக் மற்றும் ஸ்கூட்டரை ஒப்பிட்டு பார்த்தால் ஸ்கூட்டரில் குறைவான மைலேஜ், பைக்கில் அதிகமான மைலேஜ் கிடைக்கும். இதற்கு பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது. இதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் முன்பு மைலேஜ் குறித்த நமது பார்வையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாகனத்தின் மைலேஜ் என்பது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதுதான். இதில் எவ்வளவு தூரம் பயணிக்கிறோம் என்பது பயணிக்கும் வேகத்தை பொருத்ததாக இருக்கிறது. எவ்வளவு பெட்ரோல் காலியாகிறது என்பது நம் இன்ஜின் திறனை பொருத்ததாக இருக்கிறது. இன்ஜின் செயல்படுவதற்கு ஆர்பிஎம் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்வளவு ஆர்பிஎம் கிடைக்கும் என்ற வகையில் அந்த இன்ஜினை டிசைன் செய்து வைத்திருப்பார்கள்.

உதாரணத்துக்கு தொடர்ந்து ஒரு மணி நேரம் 2000 ஆர்பிஎம்மில் வாகனத்தை இயக்கினால் ஒரு மணி நேரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் காலியாகிறது என வைத்துக் கொள்வோம். இந்த ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு கிலோமீட்டர் பயணித்து உள்ளீர்கள் என்பதை கணக்கிட்டு பார்த்தால் இது தான் உங்கள் வாகனத்தின் மைலேஜாக இருக்கும். இப்படி பார்க்கும்போது குறைவான ஆர்பிஎம்மில் அதிக தூரம் பயணித்தால் அதிக மைலேஜ் கிடைக்கும்.
சரி இப்படி இருக்கும்போது ஸ்கூட்டருக்கும் பைக்கிற்க்கும் மைலேஜ் வித்தியாசப்படுவதற்கான காரணம் என்ன? இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் கியர் அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பைக்குகளில் பெரும்பாலும் மேனுவல் கியர் பொருத்தப்படுகிறது. ஸ்கூட்டர்களில் சிவிடி கியர் பாக்ஸ் பொருத்தப்படுகிறது. இந்த கியர் பாக்ஸ் தான் இந்த மைலேஜ் வேறுபாட்டை கொண்டு வருவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

இந்த கியர் பாக்ஸ் தான் இன்ஜினில் ஏற்படும் டார்க் திறனை வாகனத்தின் சக்கரங்களுக்கு கடத்தக்கூடிய ஒரு முக்கியமான கருவியாக இருக்கிறது. மேனுவல் கியர் பாக்ஸை பொறுத்தவரை அதிகமான கியரில் பயணிக்கும் போது இன்ஜினில் ஏற்படும் அதிகமாக டார்க் வீலுக்கு கிடைத்து வீல் அதிக தூரம் பயணிக்க உதவுகிறது. இந்த மேனுவல் கியரை கண்ட்ரோல் செய்யும் ஆப்ஷன் வாகன ஓட்டுக்கு இருப்பதால் அதன் மைலேஜ் அவர் ஓட்டும் திறனில் தான் இருக்கிறது.
குறிப்பிட்ட நபர் சுமார் 2500 ஆர்பிஎமிலேயே டாப் கியரில் பயணிக்க முடியும். இப்படியாக பயணித்தால் வாகனம் சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல முடியும் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது பெட்ரோல் செலவு என்பது 2,500 ஆர்பிஎம் ஏற்படுவதற்கான பெட்ரோல் செலவு தான் ஆகும். அதே நேரம் அதிகமான தூரம் நம்மால் பயணிக்க முடியும். இதுவே குறைந்த கீயரில் பயணித்தால் வேகம் குறையும், இதனால் பயணிக்கும் தூரமும் குறையும்.
பயணிக்கும் தூரம் குறைந்தாலும் பெட்ரோல் செலவு என்பது சரியாக 2500 ஆர்பிஎம்மிற்காக செலவாகும் அளவு மட்டுமே இருக்கும். இதனால் மைலேஜ் குறையும். இதுதான் நடைமுறையில் இருக்கும் விஷயமாகும். இதனால் மேனுவல் கியர் கொண்ட வாகனத்தை ஓட்டுபவர் குறைவான ஆர்பிஎம்-ல் நீண்ட நேரம் டாப் கியரில் பயணித்தால் நல்ல மைலேஜ் கிடைக்கும்.
ஆனால் ஸ்கூட்டர்களில் உள்ள சிவிடி கியர் பாக்ஸ்களை பொறுத்தவரை தானியங்கியாக ஆர்பிஎம்மை பொறுத்து தன்னைத்தானே கியரை மாற்றி இழுவை திறனை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் நீங்கள் குறைவான ஆர்பிஎம்மில் இருக்கும்போது அதன் கியர் குறைந்து விடும். அதுவே அதிகமான ஆர்பிஎம்மில் இருக்கும் போது அதன் கியர் அதிகமாகிவிடும் என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
இதனால் வாகன ஓட்டியிடம் கியரின் கண்ட்ரோல் இருக்காது. இதனால் பைக்கையும் ஸ்கூட்டர் ஒப்பிட்டு மைலேஜ் கணக்கிட்டால் பைக் தான் அதிகமான மைலேஜ் தரும் வாகனமாக இருக்கும் ஸ்கூட்டர் குறைவான மைலேஜ் தரும் வாகனமாக தான் இருக்கும். இதுதான் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் பைக்கை விட ஸ்கூட்டர் குறைவான மைலேஜ் கொடுத்தாலும், இறுதியாக வாகன ஓட்டி எந்த வகையில் வாகனத்தை ஓட்டுகிறார் என்பதை பொறுத்து இறுதி கட்ட மைலேஜ் என்பது இருக்கிறது. பைக் ஓட்டுபவர் மிக மோசமாக வாகனம் ஓட்டி, ஸ்கூட்டர் ஓட்டுபவர் சிறப்பாக வாகனம் ஓட்டினால் பைக்கை விட ஸ்கூட்டர் மைலேஜ் அதிகம் தரும் வாகனமாக கூடமாறும்.


Click it and Unblock the Notifications









