கார் பேட்டரியை சிறப்பாக பராமரிப்பதற்கான சில வழிமுறைகள்
மன நிம்மதியான கார் பயணத்துக்கு மகிழ்ச்சியான மனோநிலை, நல்ல சாலைகள் மட்டுமின்றி, காரும் சிறப்பான கன்டிஷனில் இருப்பது அவசியம். காரை கன்டிஷனாக வைத்துக் கொள்வதற்கு, அவ்வப்போது சிறிய சிறிய பராமரிப்பு முறைகளை செய்து வருவது அவசியம்.
அதில், மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பாகம் பேட்டரி. செல்ஃப் மோட்டார் முதல், எச்சரிக்கை கருவிகள், விளக்குகள் வரை அனைத்து முக்கியமான பாகங்களை இயக்குவதற்கும் பேட்டரிதான் பிராதானம். சில விஷயங்களை கடைபிடித்தால், பேட்டரியின் செயல்திறன், ஆயுட்காலம் ஆகியவை கூடும் என்பதுடன் சில சமயம் நடுவழியில் நம்மை நட்டாற்றில் விடாது.

சுத்தம்
காரின் பேட்டரி எப்போதும் சுத்தமாக இருப்பது அவசியம். ஓய்வு நேரங்களில் பருத்தி துணியை கொண்டு பேட்டரியில் படிந்திருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை கவனமாக துடைத்து சுத்தப்படுத்துங்கள். மேலும், பேட்டரியில் இருக்கும் ஆசிட் பட்டால் தோலில் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கையுறை அணிந்து கொண்டு சுத்தம் செய்வது பாதுகாப்பானது.

பெல்ட்
பேட்டரியை இறுக்கிப் பிடித்திருக்கும் பெல்ட் சரியாக இருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், கார் செல்லும்போது ஏற்படும் அலுங்கல், குலுங்கல்களில் பேட்டரியிலிருந்து ஆசிட் வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது.

தண்ணீர் அளவு
பேட்டரியில் தண்ணீர் அளவு சரியாக இருக்கிறதா என்பதை பார்க்கவும். குறைவாக இருந்தால் டிஸ்டில்டு வாட்டர் எனப்படும் வடிநீரை சரியான அளவில் நிரப்பவும்.

ஒயர்கள் இணைப்பு
கேபிள்கள் மற்றும் ஒயர்கள் இணைப்பு சரியாக இருக்கிறதா என்று சோதித்துக் கொள்வதுடன் அனைத்திற்கும் உறை போட்டிருந்தால் ஆசிட் கசிந்தால் கூட ஒயர்களில் பாதிப்பு ஏற்படாது.

கசிவு
பேட்டரியை சுத்தப்படுத்தும்போது அந்த பேட்டரி வைக்கப்பட்டிருக்கும் டிரேயில் ஆசிட் கசிந்துள்ளதா என்பதை பார்ப்பது மிக முக்கியம். ஏனெனில், பேட்டரியின் அடிப்பாகத்தை பாதித்து விடும். மேலும், பேட்டரியில் கசிவு இருப்பது தெரியவந்தால் மெக்கானிக்கிடம் சென்று சோதிப்பதுடன், பேட்டரியை மாற்றுவதும் நல்லதே.

ஹெட்லைட்
கார் எஞ்சின் அணைத்து வைக்கப்பட்டிருக்கும்போது தேவையில்லாமல் ஹெட்லைட்டை ஒளிர விடாதீர். அது பேட்டரி சார்ஜையும், ஆயுளையும் குறைத்துவிடும். பழுதான பல்புகளையும் மாற்றிவிடுங்கள்.

கேபிள் சுத்தம்
கேபிளில் சில சமயம் பூஞ்சைகள் போன்று பூத்து போவதுண்டு. பிளாஸ்டிக் பிடிகொண்ட சிறிய கத்தியை கொண்டு அதனை சுத்தப்படுத்துங்கள். மசை அல்லது ஏதாவது ஒரு லூப்ரிகண்டை அதன் மீது தடவினால் மீண்டும் பூத்து போகாது.

சார்ஜ்
காரின் டைனமோவிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகாது. எனவே, 6 மாதங்கள் முதல் வருடத்திற்கு ஒரு முறையாவது சர்வீஸ் சென்டர் அல்லது மெக்கானிக்கிடம் பேட்டரியில் சார்ஜ் சரியாக இருக்கிறதா என்பதையும், இல்லையெனில், சார்ஜ் ஏற்றி பின்னர் காரில் பொருத்துங்கள்.

இணைப்பை துண்டியுங்கள்
வெளியூர் செல்லும்போதோ அல்லது நீண்ட நாட்கள் காரை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிந்தால் பேட்டரியிலிருந்து கேபிள்களின் இணைப்பை துண்டித்து விட்டு செல்லுங்கள்.

இதுவும் முக்கியம்
காரை வெயில், மழை படும் வெட்டவெளியில் நிறுத்தாமல் பாதுகாப்பான ஷெட் அல்லது போர்டிகோவில் நிறுத்துவது நல்லது. பேட்டரியில் வெப்பத்தால் பாதிப்பு ஏற்படாமல் நீண்ட ஆயுளுடன் நிலைத்து நிற்கும்.


Click it and Unblock the Notifications








